×

தேசிய கட்சி தொடக்க விழாவில் பங்கேற்காத தெலங்கானா முதல்வரின் மகள்.. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் பிளவு?

 

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவரின் மகள் கவிதா பங்கேற்காததால், அந்த கட்சியிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசாங்கம் நடைபெற்று வருகிறது.  தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ் தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு புதிய பெயர் வைத்தார். தெலங்கான ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரை பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என மாற்றினார். 

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் சந்திரசேகர் ராவின் மகளும், அந்த கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவருமான கவிதா கலந்து கொள்ளவில்லை. கவிதா அன்றைய தினம் வீட்டில் இருந்தார். மேலும் கவிதா டிவிட்டரில், தசராவின் இந்த புனித நாளில், நாங்கள் வீட்டில் ஆயுத பூஜை  செய்தோம் என பதிவு இருந்தார். தேசிய கட்சி தொடங்கும் விழாவில் கவிதா கலந்து கொள்ளாதது மட்டுமல்ல,  வரவிருக்கும் முனுகோடு இடைத்தேர்தலுக்கான டி.ஆர்.எஸ். பொறுப்பாளர்கள் பட்டியலிலும் கவிதாவின் பெயர் இடம் பெறவில்லை.

ஆனால் அந்த பட்டியலில்  அவரது சகோதரர் கே.டி.ராம ராவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனையடுத்து தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதா?, முதல்வர் சந்திரசேகர் ராவ் குடும்பத்துக்குள் பிரச்சினை எழுந்துள்ளதா? என்ற கேள்விகள் தெலங்கானா ராஷ்டிரா சமிதி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.