×

 ’’அவர்கள் ஆப்பிளோடு மட்டுமல்ல கத்தியோடும் வந்திருக்கிறார்கள் ’’

 

அவர்கள் ஆப்பிளோடு மட்டுமல்ல கத்தியோடும் வந்திருக்கிறார்கள் என்று திமுக ஆட்சி கலைக்கப்பட்ட நேரத்தில் கலைஞர் சொன்னது குறித்து பகிர்ந்திருக்கிறார் சுப.வீரபாண்டியன்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப . வீரபாண்டியன் ஒரு நிமிடச் செய்தி என்று கலைஞர் குறித்த நினைவை தனது டுவிட்டர் பக்கத்தில்  வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார்.   அதை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலி பத்திரிக்கை செய்தி  வெளியிட்டுள்ளது.

அதில்,  ’’ 1991 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் 28ஆம் தேதி அன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த  வி.சி. சுக்லாவும் அதே துறையிடைய செயலாளர் துபேயும் அப்போது தமிழக முதல்வராக இருந்த கலைஞரை பார்ப்பதற்காக வந்தார்கள். 

அன்றைக்கு கலைஞர் மதுரையில் இருந்ததால்,  அவர்கள் நேரடியாக மதுரைக்குச் சென்று கலைஞரை சந்தித்தார்கள்.   தாங்கள் கொண்டு வந்த ஆப்பிள் பழங்களை கொடுத்து கலைஞரோடு மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்தார்கள் . பின்னர்,  நாங்கள் இலங்கைக்கு செல்கிறோம். அங்கு இருக்கின்ற பிரதமரை பார்க்க இருக்கிறோம். ஈழப் பிரச்சனைக்கு எப்படி தீர்வு கொண்டு வரலாம் என்பது குறித்து உங்கள் கருத்தையும் அறிந்து செல்லவே வந்திருக்கிறோம் என்று சொன்னார்கள்.

 பேசி விட்டு புறப்படுகின்ற போது,  பத்திரிக்கையாளர்களிடம்,   எங்களுக்கு தமிழ்நாடு முதல்வரோடு ஏற்பட்ட சந்திப்பு பயனுடையதாக இருந்தது என்று சொன்னார்கள். 

 இது நடந்தது ஜனவரி 28ஆம் தேதி.  30ஆம் தேதி தமிழ்நாடு அரசு கலைக்கப்பட்டு விட்டது.  அப்போது கலைஞர் சொன்னார்.. அன்றைக்கு நண்பர்கள் ஆப்பிளோடு வந்ததை நிருபர்கள் பார்த்தார்கள்.  அவர்கள் ஆப்பிளோடு மட்டுமல்ல கத்தியோடும் வந்திருக்கிறார்கள் என்பது எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது என்றார் ’’என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.