×

திமுகவுக்கு மூக்கணாங்கயிறு போட்டுவிட்டார்கள் - ஓபிஎஸ்

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கியதிலிருந்து சென்னையில் மிகவும் மந்தமாக இருந்தது.  மதியம் ஒரு மணி நிலவரப்படி சென்னை மாநகராட்சியில் இருபத்தி மூன்று புள்ளி 42 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

 தமிழகம் முழுவதும் மதியம் ஒரு மணி நிலவரப்படி 35.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.   மொத்தம் 2 கோடியே 83 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கின்ற நிலையில்,   மாநகராட்சிகளில் 28. 50 சதவீதமும்,   நகராட்சிகளில் 41.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.   பேரூராட்சி பகுதிகளில்46.  92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

 இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் எட்வர்டு பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.  

 அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   ‘’திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது .   அதனால் அந்த ஆட்சிக்கு மூக்கணாங்கயிறு போடும் வகையில் தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து வருகின்றார்கள்’’ என்று தெரிவித்தார்.

 தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம்,   ‘’அதிமுகவினர் தேவையின்றி போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டார்கள்.  நியாயமான கோரிக்கைகளுக்காகத் தான் போராட்டம் நடத்துவோம்.   அப்படித்தான் கோவையில் ஆளும் கட்சியினரின் அடாவடியை கண்டித்து தான்  முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினார்கள்.   ஆனால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.  ஆளும் கட்சியினரின் அடாவடியைத் தாண்டியும் அதிமுக இந்த தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும்’’ என்று தெரிவித்தார்.