×

பாஜக தலைவர் அண்ணாமலை என்ன திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா? அவர் சொல்வது வேத வாக்கா?

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையா? அவர் சொல்வது வேத வாக்கா? அவர் அரசியல் செய்கிறார் அவர் அரசியல் செய்வதற்காக புழுதி வாரித் தூற்றி வருகிறார் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்


புதுக்கோட்டை நகராட்சி 19வது வார்டுக்கு உட்பட்ட திருக்கோகரணம் மியூசியம் அருகே அந்த வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் காவல்துறையினர் அறிவுறுத்தியது படி திருச்சி சாலையில் அவரது சொந்த செலவில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மூன்று சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி உள்ளார். இதனை இன்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ மடாதிபதிகளாக இருக்கட்டும், அறநிலையத்துறை அதிகாரிகளாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அவர்கள் வரம்புக்குள் பேச வேண்டும், பிரிவினையை தூண்டும் விதத்திலையோ அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலையோ பேசக்கூடாது. அளவோடு இருக்க வேண்டும், 

மடாதிபதிகள் வாயை திறக்கக் கூடாது பேசக்கூடாது என்பது அல்ல, அவர்கள் கருத்து சொல்லலாம், பேசலாம். மடாதிபதியோ, தேவாலயம் பள்ளிவாசல் இந்து மதக் கோயில்கள் சம்பந்தப்பட்டவர்கள், மதத் தலைவர்கள் என யாராக இருந்தாலும் அவரவர்கள் பாராட்டி கொள்ளலாம். அவர்கள் மதத்தை புகழ்ந்து கொள்ளலாம். ஆனால் பிற மதத்தினரை புண்படுத்தும் விதத்திலையோ மற்ற நம்பிக்கையை உடைக்கும் விதத்திலோ அதன் மூலமாக மத பிரச்சனையோ மக்கள் பிரச்சினையையோ பிரிவினையை தூண்டும் படி பேசக்கூடாது, மடாதிபதிகள் அமைதியை நிலைநாட்ட கூடியவர்கள் அவர்கள் அவர்களது வரம்புக்குள் பேச வேண்டும்.

மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி எந்த ஆதினமாக இருந்தாலும் சரி அவர்களை மதிக்கிறோம், அரசும் அவர்களை மதிக்கும். மடாதிபதிகள் பேசவே கூடாது என்பதல்ல அவர்களது பேச்சு பிரிவினையை தூண்டும் விதத்திலையோ மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி புண்படுத்தும் விதத்திலையோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படி இருக்கக் கூடாது. நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து வருகின்ற 11ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும், காங்கிரஸ் கட்சி தலைவர்களை அதிகபட்சமாக பழிவாங்கும் நடவடிக்கையில் தான் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது இது கடுமையான கண்டனத்துக்குரியது. கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் கேரளா முதல் அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக குற்றவாளி கூறும் வாக்கு மூலத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது குறித்து விசாரணை நடத்தி உண்மை நிலை தெரிய வேண்டும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை அல்ல, அவர் சொல்வது வேத வாக்கா, அவர் அரசியல் செய்கிறார், அவர் அரசியல் செய்வதற்காக புழுதி வாரித் தூற்றி வருகிறார்” என்று தெரிவித்தார்.