×

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்... களம் இறங்கும் சசி தரூர்.. சோனியா காந்தி ஒப்புதல்

 

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட சசி தரூருக்கு அந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், அடுத்த மாதம் நடைபெற காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தியிடம் ஒப்புதல் பெற்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சசி தரூர் நேற்று மதியம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது, கட்சியின் உள்ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என்று சோனியா காந்தியிடம் சசி தரூர் தெரிவித்துள்ளார் இதனையடுத்து அவர் தலைவர் தேர்தலில் போட்டியிட சோனியா காந்தி ஒப்புதல் அளித்ததாக  தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒரு பிரிவினர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் உறுதியாக நிற்கின்றனர். மேலும் ராஜஸ்தான் உள்பட பல மாநில காங்கிரஸ் பிரிவுகள் ராகுல் காந்தி மீண்டும் கட்சி  தலைவராக வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர் போட்டியிட இருப்பதாக வெளியான செய்தி அந்த கட்சியினருக்கு ஷாக் கொடுத்துள்ளது.


காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வரும் வியாழக்கிழமை ( 22ம் தேதி) வெளியாகும். தலைவர் தேர்தலில் விருப்பம் உள்ளவர்கள் வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அக்டோபர் 1ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும். அக்டோபர் 8ம் தேதி வேட்புமனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள். அக்டோபர் 17ம் தேதி தேர்தல் நடைபெறும். அக்டோபர் 19ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.