×

அன்று கமல்ஹாசனுக்கு இன்று அமைச்சர்களுக்கு.. ஜீயரின் அதே அதிரடி

 

 கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என்று எச்சரித்த  மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், இன்று அமைச்சர்களை நாட்டில் நடமாட விடமாட்டோம் என்று எச்சரித்திருக்கிறார்.

 மனிதரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து தருமபுரம் ஆதீனத்தில் இம்மாதம் இறுதியில் நடக்க இருந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்திருக்கிறார்.  இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

 மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.   அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.  

 தருமபுர ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க இவர்கள் யார்? இந்து தர்மத்தை தடை செய்வதற்கும்  இந்து தர்மத்தை பற்றி சொல்வதற்கும் இவர்கள் யார்? உங்கள் வீட்டில் சமைப்பதற்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டுக் கொண்டா நீங்கள் சமைக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பியவர்,

ஒரு சிலருக்கு தர்மத்தின் மேல் கடவுள் மேல் நம்பிக்கை இல்லாவிட்டால்,  அவர்கள் அவர்களின் நம்பிக்கையோடு இருக்கட்டும் . அதற்காக இன்னொருத்தரோட நம்பிக்கையை கெடுக்க வேண்டாம் .  இதே மாதிரி இந்து தர்மத்துக்கு எதிராக  இந்து தர்மத்துக்கு விரோதமாகவும் தொடர்ந்தால் அவர் அமைச்சராக இருந்தாலும் நாட்டில் நடமாட விட மாட்டோம் என்ற எச்சரிக்கையை கொடுக்கலாம்.   அரசாங்கம் எல்லா தர்மத்துக்கும் ஒரே மாதிரி இருந்தால் நாங்கள் அரசாங்கத்தை பாராட்டுவோம்.   ஆனால் இந்து தர்மத்தை மட்டும் அரசாங்கம் எதிர்த்தால் நாங்கள் அதை விட மாட்டோம் என்று கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

ஜீயரின் இந்த எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை,  ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டுள்ள கமலஹாசனை எங்கும் நடமாட விட மாட்டோம் என்று எச்சரித்திருந்தார்.   மேலும்,   கமலஹாசன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டாரோ என தோன்றுகிறது என்றும்,  அவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிடம் இருந்து லஞ்சம் வாங்கி கொண்டு ஹிந்துக்களுக்கு விரோதமாக பேசி வருகிறார் எனவும் கடுமயாக விமர்சித்திருந்தார்.