உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர்.. ஆவலுடன் காத்திருக்கும் அமைச்சர் சிவசங்கர்
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வருவார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று அவரது நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பேசிவந்தார். அதைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் திமுகவின் வெற்றிக்கு பாடுபட்ட தீவிர பிரச்சாரம் செய்து வந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வர வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களுக்கெல்லாம் மேலாக சென்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வர வேண்டும் என்று தனது ஆவலை தெரிவித்திருக்கிறார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு கூவம் சாலை வழியாக புதிய பேருந்து வழித்தட திட்டத்தினை தொடங்கி வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி இந்நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ’’சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கைக்கு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு மிகச்சிறந்த சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் செய்யும் பணியை மக்கள் பார்ப்பது போல் அவர் அமைச்சரான மிக சிறப்பாக செயல்படுவார்கள். அவர் அமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கையை நானும் முன் வைக்கிறேன்’’ என்று தெரிவித்தார்
மேலும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். அதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.