சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது -எஸ். பி. வேலுமணி கோரிக்கை நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குறிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். விசாரணைக்கு பின்னர் எஸ். பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கினை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுத்துவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்பி வேலுமணி. இவர் அமைச்சராக பொறுப்பு வகித்த போது டென்டர்கள் வழங்கியதில் 800 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து அறப்போர் இயக்கம், திமுக சார்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்தது. இந்த டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு தொடர்பாக எஸ். பி .வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி வேலுமணி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் தொடர்பாக கடந்த எட்டாம் தேதி அன்று நீதிபதிகள் பி .என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்குகளை பதிவு செய்திருப்பதாக வாதிட்டார். பின்னர் தமிழக அரசு சார்பில் , வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும் அதிமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டது என்று வாதிட்டது. அறப்போர் இயக்கத்தின் சார்பில், இந்த டெண்டர் முறைகேடுகளுக்கு துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் . அது கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமல்லாமல் தற்போதைய எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றும் வாதிட்டது.
இந்த சூழலில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி தொடர்ந்து வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் எஸ். பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஆனால் வேலுமணிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய மறுத்துள்ளனர். இதை அடுத்து சொத்து குறிப்பு வழக்கிற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேலுமணி மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.