×

’’முதல்வருடன் துபாய் சென்றதாக கூறி மிரட்டி குற்றத்தை மறைக்க பார்க்கிறார்!  விசாகா கமிட்டி  அமைக்கணும்!’’

 

பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் 'சிறுபான்மையினத்தை' சார்ந்தவர் என்ற போர்வையிலும்,  தமிழக முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தான் முதல்வருடன் 'துபாய்' சென்றதாக கூறி மிரட்டி குற்றத்தை மறைக்க பார்ப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.   இவரை உடன் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

முன்னதாக,  தமிழக அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஜாகிர் ஹு சேன் என்பவர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக  அரசு கல்லூரி ஆசிரியைகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளதாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் கூறியுள்ள நிலையில், இது குறித்து  தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

அரசு கல்லூரி ஆசிரியைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாக்கியிருப்பதும், உடன் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  உடன் ஜாகிர் ஹுசேனை பொறுப்பில் இருந்து அகற்றுவதோடு பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பெண்கள் பணியாற்றும் அனைத்து இடங்களிலும் விசாகா குழு இருக்க வேண்டும். இல்லாத நிலையில் உடன் விசாகா குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை மற்றும் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஜாகீர் உசேன் கலை பண்பாட்டு இயக்ககம் இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தை வைத்துதான், பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர் 'சிறுபான்மையினத்தை' சார்ந்தவர் என்ற போர்வையிலும்,  தமிழக முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நாராயணன் திருப்பதி.

 ’’முதல்வருடனான எனது துபாய் கலை பயணத்தை முடித்துக் கொண்டு3.4. 2022 அன்று சென்னை வந்தடைந்தவுடன் கரூர் மாவட்ட பரதநாட்டிய ஆசிரியர் சுஜாதா உங்களிடம் என் மீது புகார் தெரிவித்ததாக செய்தித்தாள் மூலம் அறிந்து மன வேதனை அடைந்தேன்.  எனது பணியானது 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் அனைத்து இசை பள்ளிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து இசைப் பள்ளிகளில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் அதன் தரம் உயர்த்துவது மற்றும் வருங்கால சந்ததியினருக்கு ஏற்ற வகையில் கற்பிப்பது தொடர்பானதாகும் .

அதன்படி 28. 2. 2020 21 கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி அனைத்து துறையின் ஆய்விற்காக சென்றிருந்தேன்.   அப்பொழுது பரதநாட்டிய துறையில் மாணவர்களின் நடனத்தை ஆய்வு செய்தபோது மாணவர்களுக்கு சரியான வகையில் பாடத் திட்டத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள படி கற்பிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.   இதுகுறித்து தலைமை ஆசிரியர் அறையில் அவரின் முன்னிலையில் ஆசிரியரிடம் விளக்கம் கோரப்பட்டது.  ஆனால் ஆசிரியை இடமிருந்து ஒழுங்கான விளக்கம் கிடைக்கப்பெறவில்லை. 

 அதனை தொடர்ந்து அனைத்து துறை மாணவர்களுக்கும் கலை தொடர்பான சொற்பொழிவு என்னால் வழங்கப்பட்டது.  இதை அடுத்து கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி பரத நாட்டிய ஆசிரியர் சுஜாதா என்பவர் அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கை கோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது குற்றம் சுமத்துவதை முற்றிலும் மறுக்கின்றேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  மேலும் விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தி உண்மையை அனைவருக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.    இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு என் மீது வீண் பழி சுமத்தி பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று  கலை பண்பாட்டு இயக்ககம் இயக்குனருக்கு கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன்  கடிதம் எழுதியுள்ளார்.