×

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை இந்த மண்ணில் ஒரு கறை.. கவர்னர் ஜகதீப் தங்கர்

 

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை இந்த மண்ணில் ஒரு கறை, வன்முறையை கட்டுப்படுத்த அன்றைய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் அண்மையில், கவர்னர் மாளிகை அனுமதியின்றி மாநில அரசு பல துணைவேந்தர்களை நியமித்துள்ளதாக கவர்னர் ஜகதீப் தங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் கடுப்படைந்த முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அவரது அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் மாநில கவர்னருக்கு பதிலாக முதல்வரை (மம்தா பானர்ஜி) அனைத்து அரசு பல்கலைக்கழங்களின் வேந்தராக நியமிக்க மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2022ஐ நிறைவேற்றியது. மேலும், மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் பார்வையாளராக கவர்னரை மாற்ற வழிசெய்யும் மேற்கு வங்க பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2022-ம் அம்மாநில சட்டப்பேரவையில் அம்மாநில அரசு நிறைவேற்றியது. 

இந்த சூழ்நிலையில் மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மாநிலத்தில் கடுமையான வன்முறைகள் நடப்பது குறித்து மாநில கவர்னர் என்ற முறையில் நான் கவலைப்படுகிறேன். தேர்தலுக்கு பிந்தைய வன்முறை இந்த மண்ணில் ஒரு கறை, வன்முறையை கட்டுப்படுத்த அன்றைய அரசாங்கம் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. ஒவ்வொரு மூலையிலும் மாபியா மற்றும் சிண்டிகேட் ராஜ் உள்ளது. நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் உள்பட மாநில முதல்வர் மூலம் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அரசியலமைப்பின்படி இந்த மசோதாக்கள் அனைத்தையும் நான் பரிசீலிப்பேன் மற்றும் உச்ச நீதிமன்ற முடிவின்படி அவற்றை ஆய்வு செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.