×

பழனிச்சாமி  சொன்னது அதிசயமாக உள்ளது - மா.சுப்பிரமணியன்

 

எடப்பாடி பழனிச்சாமி இன்று பேரவை தலைவரை குறை கூறி இருப்பது அதிசயமாக உள்ளது என்று கூறியிருக்கிறார் மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

 எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் தனது ஆதரவு பலத்தை நிரூபித்து இடைக்கால பொதுச்செயலாளராக ஆனதும் ஓ. பன்னீர் செல்வத்தை கட்சியை விட்டு விலக்குவதாக அறிவித்து ,  தனது ஆதரவாளர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக ஆக்கினார் .  இது குறித்து சபாநாயகர் அப்பாவுக்கும் கடிதங்கள் அனுப்பினார்.   

ஆனால் , தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்கவில்லை.  முன்பிருந்தது படியே எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது.   இதனால் ஆவேசமடைந்த எடப்பாடி பழனிச்சாமி,  முதல் நாள் கூட்டத் தொடரில் பங்கேற்காமல் தவிர்த்தார். 

 பின்னர் மறுநாள் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்து ஓபிஎஸ் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார்.   சபாநாயகர்  ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்காததால் சபாநாயகர் மீது குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.   இன்றைக்கு நடந்த  உண்ணாவிரத போராட்டத்திலும் சபாநாயகர் மீது குற்றச் சாட்டை முன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  ‘’பேரவைத் தலைவரின் செயல்பாடு குறித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசியதற்கு பேரவை தலைவர் பதிலை சொல்லிவிட்டார்.  பன்னீர்செல்வம் தனது அருகில் அமருவதை சகித்துக்  கொள்ள முடியாத பழனிச்சாமி இன்றைக்கு புகார் பட்டியல் வாசித்திருக்கிறார்.  

 கடந்த ஒன்றை ஆண்டில் நேர்மையாக அனைத்து கட்சி உறுப்பினர்கள் உணர்வையும் மதிப்பவராக செயல்பட்டு வருகிறார் பேரவைத்தலைவர்.  எதிர்க்கட்சியினருக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வருந்துகின்ற அளவிற்கு அவர்களுக்கு மதிப்பு தரப்படுகிறது.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இன்று பேரவை தலைவரை குறை கூறி இருப்பது அதிசயமாக உள்ளது’’ என்று கூறியிருக்கிறார்.