ஒட்டுமொத்த அதிமுகவும் என்ன முடிவு எடுக்கிறார்கள்? தினகரன் எதிர்பார்ப்பு
தொடர் தோல்விகளுக்குப் பின்னர் அதிமுக, அமமுக இரண்டு இணைய வேண்டும் என்று அதிமுகவில் பல தொண்டர்களும், நிர்வாகிகளும் முடிவெடுத்துள்ளனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இதையடுத்து தான் தேனியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை பன்னீர்செல்வத்திடம் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து மேலும் சில மாவட்டங்களில் இருந்து சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் அதிமுகவில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். ’’என்னையும் சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இதேபோல ஒட்டுமொத்த அதிமுகவும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்’’ என்று தெரிவித்திருக்கிறார் .
தொடர்ந்து அவர் இது குறித்து, ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். அதிமுகவை கைப்பற்றும் நோக்கம் அல்ல. சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய இடத்தில் அதிமுக இருக்கிறது. அந்தக் கட்சியில் இருந்து தான் இதுபோன்ற ஒட்டுமொத்த அதிமுக ஒருமித்த கருத்துடன் ஒரு முடிவு எடுக்கட்டும். தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. அமமுக தொண்டர்கள் விருப்பத்தை தெரிந்து கொண்டுதான் இந்த முடிவை நாங்கள் எடுக்க முடியும்.
தொடர் தோல்விகள் கூட இது போன்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு இருந்திருந்தால் சட்டமன்றத் தேர்தலிலேயே திமுகவை வலுவாக எதிர்த்து இருக்கலாம் என அவர்கள் நினைத்திருக்கலாம். அதிமுகவில் உள்ள எல்லோருமே எனது நண்பர்கள்தான். என்றைக்கும் நான் யாரையுமே எதிர்த்தது கிடையாது. என்னைத்தான் மூலையில் தள்ளி எதிர்த்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.