தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே யார்? பாஜகவின் ஆபரேசன் தாமரை திட்டம்!
வாரிசு அரசியலை வைத்து விளையாடுகிறது பாஜக. மகாராஷ்டிராவில் பால்தாக்கரேவின் பேரனை முன்னிறுத்தியதால் கலகம் ஏற்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டே முதல்வர் ஆகியிருக்கிறார். அதே மாதிரி தமிழ்நாட்டிலும் கருணாநிதியின் பேரனுக்கு பட்டாபிஷேகம் நடந்தால் திமுகவில் கலகம் ஏற்பட்டு ஆட்சி கலைக்கப்படும் நிலை வரும்போது யார் தமிழகத்தின் ஏக்நாத் ஷிண்டே? என்று புதிர் போடுகிறது பாஜக.
வாரிசு அரசியலின் ஆதிக்கத்திற்கு எதிராக குரல் எழுப்பி மகாராஷ்டிராவில் புதிய திருப்பத்தை கொண்டு வந்திருக்கிறார் ஏகநாத் ஷிண்டே. ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஏகநாத் ஷிண்டே இன்று இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆக உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம், வாரிசு அரசியலின் எதிர்ப்புதான்.
வாரிசு அரசியலுக்கு எப்படி ஏக்நாத் ஷிண்டே முடிவு கட்டினாரோ அதே போல் தமிழகத்திலும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப்போகிறது பாஜக என்று சலசலப்பு எழுந்திருக்கிறது.
ஆபரேஷன் தாமரை என்கிற பெயரில் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. கர்நாடகா, கோவா, மணிப்பூர், மேகாலயா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை அடுத்து தற்போது மகாராஷ்டிராவினை கைப்பற்றி இருக்கிறது. இதை அடுத்து தமிழ்நாட்டையும் கைப்பற்ற அதே ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜக கையில் எடுத்திருக்கிறது என்ற பரபரப்பு பேச்சு எழுந்திருக்கிறது.
அண்மையில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய மோடியும் அமித்ஷாவும் வாரிசு அரசியலைத்தான் அதிகம் விமர்சித்தார்கள். தெலுங்கானா,ஆந்திரா ,தமிழ்நாட்டில் விரைவில் பாஜக ஆட்சி மலரும் என்றும் அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது சேகர்பாபு ,செந்தில் பாலாஜி போன்றோர் தான் திமுகவிற்குள் ஷிண்டே போல மாற வாய்ப்பு இருப்பதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. செந்தில்பாலாஜியின் கையில் 40 எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் தகவல் பரவுகிறது.
பாஜகவின் ஆதரவுடன் திமுகவிற்குள் வாரிசு அரசியலுக்கு எதிரான குரல் ஒலிக்கும் என்றால் திமுகவிற்குள் பிளவு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். திமுக ஆட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்தி இருக்கும் நிலையில் சென்னை போராட்டத்தில் பங்கேற்று பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக சாடியதோடு அல்லாமல், சிவ சேனாவையும் திமுகவையும் ஒப்பிட்டு பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது .
சிவசேனா கட்சியில் பால் தாக்கரேவின் பேரன் ஆதித்யா தாக்கரேவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான் ஷிண்டே அதற்கு எதிராக கழகம் செய்து தனது தலைமையை நிலைநாட்டினார் என்று கூறினார். அதேபோல திமுகவும் அமைச்சரவையை விரிவாக்கத்தினை திட்டமிட்டு உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கினால் தமிழகத்திலும் ஒரு ஷிண்டே புறப்படுவார் என்று கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டு முதலில் தன்னுடன் 12 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலகத்தை தொடங்கினார். அதன் பின்னர் சிவசேனாவில் உள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்களை தன் பக்கம் கொண்டு சென்றார்.
இதனால் மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து உத்தவ்தாக்கரே விலகினார். இதை அடுத்து பாஜக சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டணியில் மகாராஷ்டிராவில் புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு சூழல் தமிழ்நாட்டிலும் உருவாக்கி பாஜக ஆட்சி மலரப் போகிறது என்பதை குறிப்பிடும் விதமாகத்தான் பாஜகவின் நிர்வாகி நிர்மல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் சிவசேனாவுக்கும் திமுக விற்கும் உள்ள ஒற்றுமை படத்தை வெளியிட்டு தமிழகத்தின் ஷிண்டே யார் என்ற பரபரப்பு கேள்வியை எழுப்பி இருக்கிறார்.