×

எல்.முருகனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டது யார்?

 

மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் ஓட்டை கள்ள ஓட்டு போட்டு விட்டார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருக்கிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி நடந்து வருகிறது.   மதியம் ஒரு மணி நிலவரப்படி முப்பத்தி 35.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.   மதியம் வரைக்கும் மந்தமாகவே இருந்த வாக்குப்பதிவு ஒரு மணிக்குப் பின்னர் விறுவிறுப்படைந்திருக்கிறது. 

 இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல். முருகனின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

’’மத்திய  அமைச்சர் எல். முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது.  மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா?’’ என்று  கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அவர் மேலும்,   ‘’ அரசு இயந்திரங்கள் எந்த அளவிற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.   திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் குறிப்பாக கோவையில் வாக்குச்சாவடியின் வாசலில் பண விநியோகம் செய்கின்றனர்.   ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல இடங்களில் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.