×

அன்று நடந்தது என்ன?அமைச்சர் காருக்காக ஆம்புலன்ஸ் காத்திருப்பு...சமாளிக்கும் ஆட்சியர்
 

 

அமைச்சரின் கார் செல்ல வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் பல மணி நேரம் நிறுத்தி வைத்து காக்க வைத்துள்ளனர் போலீசார்.  இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வருக்கு பின்னால் செல்வது மாதிரி அமைச்சரின் பின்னால் அத்தனை கார்கள் சென்றதால்,  அந்த கார்கள் கடந்த செல்லவே அவ்வளவு நேரம் ஆகியிருக்கிறது. அதுவரைக்கும் ஆம்புலன்ஸ்  காத்திருந்திருக்கிறது.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுக் கரைகளை பார்வையிட்டனர்.   இதற்காக திருவிடைமருதூர் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வு செய்ய அமைச்சர் சென்றார்.  அவரின் பின்னே அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் என  25 கார்கள் அணிவகுத்து சென்றன.

 பாலத்தின் மறுபக்கத்தில் அமைச்சர் கார் செல்லும் வரைக்கும் ஆம்புலன்ஸ் போலீசாரால் நிறுத்தி வைக்கப்பட்டது.  அமைச்சர் , அதிகாரிகள், கட்சி பிரமுகர்களின் 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்ற பின்னர்தான் நீண்ட நேரம் காத்திருந்த ஆம்புலன்ஸ் செல்ல அனுமதிக்கப்பட்டது. பள்ளி பேருந்தும் ஆம்புலன்ஸ் அருகிலேயே காத்திருந்தது.

 இதை பார்த்த பலரும்,  அமைச்சர் மற்றும் அவரது சகாக்கள் வாகனத்திற்காக  ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீசார் நிறுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இது குறித்த வீடியோ  மற்றும் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களும் வறுத்தெடுத்தனர்.

ஆம்புலன்ஸிஸ் நோயாளி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவசரமாக சைரன் ஒலித்தால் உடனே போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட வேண்டும் என்பதுதான் விதி.   இது கூட தெரியாமல் போலீஸ்காரர் இருந்திருக்கிறார்கள்.  ஒருவேளை ஆம்புலன்ஸில் இருந்தவர்கள் இறந்திருந்தால் யார் பொறுப்பேற்பது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில்,  அன்று நடந்த சம்பவத்திற்கு  ஆட்சியர் விளக்கம் அளித்திருக்கிறார்.  அவர் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ‘’கடந்த ஐந்து மற்றும் ஆறு தேதிகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினையும் மக்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  முன் தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.

 கடந்த ஐந்தாம் தேதி அன்று கல்லணை முதல் அணைக்கரை மதகு சாலை வரைக்கும் கொள்ளிடம் ஆற்றின் கரையில் பயணத்தை மேற்கொண்டு 80 கிலோ மீட்டர் தூரத்தினை காலை முதல் மாலை வரைக்கும் 12 மணி நேரம் பயணம் செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் .  அணைக்கரை ஆய்வு மாளிகையில் அரசு அலுவலர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்ததினால் அணைக்கரை பாலம் வழியாக ஆய்வு மாளிகைக்குச் சென்றார் அமைச்ச்ர்.


 அணைக்கரை பாலம் என்பது ஒரு வழியாக மட்டுமே செல்லக்கூடிய பாலம்.  ஒரு வழியாக செல்லும் தடத்தில் வாகனங்கள் வந்தால் மறுபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும் . மறுபுறத்தில் வாகனங்களை அனுமதிக்கும் போது அந்த பக்கத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும் இதுதான் அன்றைக்கும் நடந்தது.  கொள்ளிட ஆற்றின் வலது கரையோரம் ஆய்வு செய்து விட்டு அணைக்கரை பாலத்திற்கு அமைச்சரும் அவரது பாதுகாப்பு வாகனங்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனமும், பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை , தீயணைப்பு துறை என அனைத்து துறை வாகனங்களும் நிறைந்த ஒரு கிலோமீட்டர் கொண்ட பாலத்தின் மையப்பகுதியில் துறை அலுவலர்கள் வாகனங்கள் செல்லும் போது தான் மறுபுறம் அவசர ஊர்தி வந்திருக்கிறது.

 அந்த நேரத்தில் வாகனங்கள் பின்னோக்கி சென்ற செல்வதை விட முன்னோக்கி வேகமாக சென்று அவசர உதவிக்கு வலியுறுவது தான் சிறந்தது என்று நினைத்து அதன்படியே பாதுகாப்பு வாகனத்தில் பாதுகாவலர்கள் வழிகாட்டியுடன் அனைத்து வாகனங்களும் வேகமாக சென்றது. அவசர உறுதிக்கு விரைவில் வழி விட வேண்டும் என்பதற்காக வேகமாக சென்றோம் என்று கூறி இருக்கிறார்.