மோசமான ஊழல்வாதி எஸ்.பி.வேலுமணி வழக்கில் முனீஸ்வர் நாத் பண்டாரி ஏன் ஆர்வம் காட்டுகிறார்? கேசி பழனிச்சாமி
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு முன்னாள் அதிமுக முன்னாள் எம். பி. யும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன கே. சி. பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். முனீஸ்வர் நாத் பண்டாரி, பதவிக்காலம் இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், மோசமான ஊழல்வாதி எஸ்.பி.வேலுமணி வழக்கை கையாள்வதில் அசாதாரண அக்கறை காட்டுகிறார். எம்பி, எம்.எல்.ஏக்களின் வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிபதி அமர்வு உள்ள நிலையில் வழக்கினை விசாரிப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார் முனீஸ்வர்நாத் பண்டாரி என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவில் உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரி நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதையும் மீறி அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வேலுமணி தரப்பில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகி இருந்தார். மத்திய அரசின் வழக்கறிஞர் ராஜு . வருமான வரித்துறை சார்பாக வழக்குகளில் ஆஜராகுபவர் ராஜு . அவர் எப்படி இந்த வழக்கில் ஆஜராகலாம் என்று தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கூடிய மனுக்களை தனி நீதிபதி மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் . இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய முடியாது என்று தமிழ்நாடு அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது . இந்த நிலையில் இது குறித்த உத்தரவை தலைமை நீதி அமர்வு இரண்டு நாட்களுக்கு பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டது. இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக முடியாத அன்று தமிழக அரசின் ஆட்சேபனையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில் டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ். பி. வேலுமணி சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், முனீஸ்வர் நாத் பண்டாரி, பதவிக்காலம் இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், மோசமான ஊழல்வாதி எஸ்.பி.வேலுமணி வழக்கை கையாள்வதில் அசாதாரண அக்கறை காட்டுகிறார். எம்பி, எம்.எல்.ஏக்களின் வழக்குகளை விசாரிப்பதற்கு தனி நீதிபதி அமர்வு உள்ள நிலையில் வழக்கினை விசாரிப்பதற்கு ஏன் ஆர்வம் காட்டுகிறார் முனீஸ்வர்நாத் பண்டாரி என்ற சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.