×

ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாதது ஏன்? வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

 

அதிமுக பொதுக் குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று   ஓபிஎஸ் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளுமே இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால்,  இரண்டு வழக்குகளின் மீதும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதால் மீண்டும் விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

 கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி அன்று அதிமுகவில் ஒற்றை தலைமை தீர்மானம் ஏற்றப்பட இருந்ததால் அதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.  அவரின் மனுவை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று சொல்லி தடை விதிக்க மறுத்துவிட்டார்.  இதை எதிர்த்து சண்முகம் உடனே மேல்முறையீடு செய்ததில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து புதிய தீர்மானங்கள் எதுவும் இயற்றக் கூடாது என்று தடை விதித்தனர் .  ஆனாலும் அந்த தடையை மீறி புதிய தீர்மானங்கள்  ஏற்றப்பட்டன.  அதன்படி வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது.

 இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சண்முகம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அவரின் மனுவை விசாரித்த நீதிபதிகள்  அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான அந்த மனுவை விசாரிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.  இதன் பின்னர் ஓ .பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.  

 பொதுக்குழு நடைபெறுவதற்கு 15 தினங்களுக்கு முன்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்பது வழக்கம் . ஆனால் பொதுக்குழுவிற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது தான் தனக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார்கள் . இது முறையற்ற செயல் . அதனால் இந்த பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

 ஓ. பன்னீர் செல்வத்தின் மனு மீதான விசாரணை இன்று அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.   அதிமுக பொதுக் குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த இரண்டு வழக்குகளுமே இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 இரண்டு வழக்குகளின் மீதும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை.   அதனால் மீண்டும் விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல்.