‘’விசிகவை ஏன் பாஜக தூண்டி விட முயற்சிக்க வேண்டும்?’’
தமிழகத்தில் பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிட திட்டமிடுகின்றனர் பாஜகவினர். ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறுவது திசை திருப்பும் முயற்சி. தமிழக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழகத்தில் வேரூன்ற பாஜக திட்டமிடுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
மயிலாடுதுறையில் தமிழக ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்த நடந்த முயற்சி குறித்து பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது , தமிழக ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக சொல்வது திசை திருப்பும் முயற். சி பாஜகவை சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். பாஜகவினர் வன்முறையை தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்கள். அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதன் மூலம் தமிழ்நாட்டில் வேரூன்ற வேண்டும் என்றே திட்டமிட்டு பாஜகவினர் இவ்வாறு செய்கின்றனர் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘’வன்முறையை தூண்டி விட பாஜக முயற்சிக்கிறதா? விடுதலை சிறுத்தைகள் கட்சியை பாஜக ஏன் தூண்டி விட முயற்சிக்க வேண்டும்?’’ என்று கேட்கிறார். அதாவது, விசிகதான் வன்முறை என்கிறார் நாராயணன் திருப்பதி.