×

ஆளுநருக்கு எதுக்கு  அவ்வளவு பெரிய  மாளிகை? முதல்வரின் தடாலடி

 

 ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் இடத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைத்துவிட்டு ஆளுநருக்கு தனியாக ஒரு பங்களாவை வேறு இடத்தில் ஒதுக்கி விடலாம் என்று ஆலோசனை நடந்து வருகிறது.

 கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை 160 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிறது.  அவ்வளவு பெரிய இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் அல்லது வேறு ஏதேனும் அரசு அலுவலகங்கள் கட்ட பயன்படுத்தலாம்.   இவ்வளவு பெரிய இடத்தில் ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை . அவருக்கு என்று தனியாக ஒரு பங்களாவை வேண்டுமானாலும் ஒதுக்கலாம் என்று முதல்வரிடம் ஆலோசனை தெரிவித்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் இடம் பொதுப்பணித்துறை வசம்தான் உள்ளது  என்று  மேலும் பலரும் இதே கருத்தை முதல்வரிடம் வலியுறுத்தி வருவதாக தகவல். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் சிந்தனைச்செல்வன் கூட சட்டமன்றத்தில் இதை வலியுறுத்தி இருக்கிறார்.   அதனால் ஆளுநர் மாளிகை இடமாற்றம் குறித்து தனக்கு வந்திருக்கும் வலியுறுத்தல்களினால்  முக்கியமான வழக்கறிஞர்களிடம் முதல்வர் விவாதித்திருக்கிறார்.

 இப்போது இருக்கும் நிதி சுமையில்  ஆளுநர் மாளிகையை மாற்றி அங்கே வேறு ஒரு கட்டிடம் கட்டுவது என்பது சாத்தியக் குறைவானது.  மேலும் , ஆளுநர் மாளிகையை சுற்றி  வனப்பகுதி உள்ளது.  அதனால் சூழலியல் காரணிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் முதல்வர் என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.

 தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு மான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ஆளுநர் மாளிகையை மாற்றுவது குறித்த ஆலோசனைகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .  அதேநேரம் ஆளுநர் மாளிகையை தான் இடமாற்றம் செய்ய முடியுமே தவிர ஆளுநர் மாறி விடப் போவதில்லையே என்றும் சிலர் முதல்வரிடம் சொல்லி வருகிறார்களாம்.