×

இந்த முறை ஏன் வெளியே நடக்குது! இந்த முறையும் ‘பன்னீர்’டென்ஷன் இருக்குமோ?

 

அங்கே இங்கே என்று அலைந்து பார்த்துவிட்டு கடைசியில் வழக்கம் போல வானகரம் ஸ்ரீ வாரு திருமண மண்டபத்திலேயே பொதுக்குழுவை நடத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.   ஆனால் இந்த முறை மண்டபத்தின் உள்ளே பொதுக்குழுவை நடத்தாமல் வெளியே நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.   மண்டபத்தின் வெளியே வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இதற்கான அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. 

 கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சட்ட சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சமூக இடைவெளியுடன் 3000 இருக்கைகள் அமைப்பதற்கான விசாலமான இடவசதி தேவைப்பட்டதால்  மண்டபத்திற்கு உள்ளே இந்த முறை பொது குழுவினை  நடத்தாமல் மண்டபத்திற்கு வெளியே விசாலமாக பந்தல் அமைத்து  பொதுக்குழுவை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறார்கள்.   இதற்காக நேற்று பூஜை போட்டு பந்தல் அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும்,  முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின்.  

இந்த பந்தல் அமைக்கும் பணியினை  எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் நாளை பார்வையிட இருக்கிறார்கள்.   திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்துவதற்காக காவல்துறையிடம் உரிய அனுமதியும் வாங்கி இருக்கிறார்கள்.

 கடந்த முறை நடந்த  பொதுக்குழுவில் எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர் பெஞ்சமின்.   அவர் மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடியை  கௌரவிப்பதற்காக ஆளுயுயர பன்னீர் ரோஜா மாலையை தூக்கிக் கொண்டு மேடைக்குச் செல்ல,   சும்மா இருய்யா என்று அவரை தள்ளிவிட்டு இருக்கிறார் எடப்பாடி.   எதுக்கு இப்படி நடந்து கொள்கிறார் என்பது எதுவுமே தெரியாமல் மேடையை விட்டு மாலையுடன் இறங்கி இருக்கிறார் பெஞ்சமின்.  மீண்டும் மேடை ஏறி மாலையை வலுக்கட்டாயமாக போட்டுவிட,   அப்போதும் சும்மா இருக்கியா என்று ஆவேசமாக சத்தம் போட்டு இருக்கிறார்.   எதற்கு எடப்பாடி இப்படி டென்ஷனாகிறார் என்பது தெரியாமல் குழப்பத்துடன் மேடையை விட்டு அதிருப்தியில் இறங்கி இருக்கிறார் பெஞ்சமின் .

 பன்னீர் மீதான டென்ஷனில் இருந்தபோது பன்னீர் ரோஜா மாலையை போட்டதால் தான் எடப்பாடி டென்ஷன் ஆகிவிட்டார் என்று ஒரு தகவல் பரவியது.  அண்ணன் ஓபிஎஸ் பக்கத்தில் இருக்கும் போது அவரை வைத்துக் கொண்டு எனக்கு இவ்வளவு பெரிய மாலையை போட்டால் அவர்  என்ன நினைப்பார் என்பதற்காகத் தான் மேடையில் அப்படி  டென்ஷன் ஆகிவிட்டேன் என்று பின்னர் காரில் ஏறும்போது பெஞ்சமினிடம் சொல்லி  வருத்தம் தெரிவித்தார் எடப்பாடி என்று ஒரு தகவல் பரவியது. பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் கட் அவுட் களில்  ஓபிஎஸ் க்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்று எடப்பாடி உத்தரவிட்டிருந்த நிலையில் , அதை மீறி எடப்பாடிக்கு இணையாக ஓபிஎஸ் படங்களையும் வைத்திருந்ததோடு அல்லாமல், ஓபிஎஸ் -இபிஎஸ் இருவரும் பூங்கொத்து கொடுத்துக் கொள்வது போன்ற படத்தையும் வைத்திருந்ததால் டென்ஷனில் இருந்த  எடப்பாடி,   அதை மேடையிலேயே காட்டி விட்டார் என்று தகவல் பரவியது. 

 இந்த மூன்றில் எது உண்மையோ தெரியவில்லை.   அதே மாதிரி இந்த முறையும் அந்த ’பன்னீர்’ மாலை டென்ஷன் இருக்குமோ என்னவோ?  தெரியவில்லை.