×

அதிமுக போட்டியிடுமா? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

 

 நீயா நானா என்று எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர் செல்வத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?  அப்படி அதிமுக சார்பில் யாரும் போட்டியிட்டால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்று கட்சியினரிடையே கேள்வி எழுந்திருக்கிறது.

 ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்திற்கும்  இடையே மீண்டும் மோதல் எழுந்திருக்கிறது.  அதிமுகவில் சட்ட விதிகளின்படி பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டுவர முடியாது என்று பன்னீர்செல்வம் தரப்பு சொல்லி வர,  எடப்பாடி தரப்பினரோ மாவட்டச் செயலாளர்களின் ஆதரவுடன் தனித் தீர்மானம் கொண்டுவர முயன்று வருகின்றனர்.

 அதிமுகவில் இருக்கும் 70 மாவட்ட செயலாளர்களில் 64  பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதால் இந்த பெரும்பான்மை ஆதரவுடன் தனித்தீர்மானம்  கொண்டு வந்துவிடலாம் என்று அவர்கள் அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார்கள்.   மாவட்ட செயலாளர்களால் கட்சியின் தலைமை பொறுப்பை கொண்டுவர அதிமுக சட்ட விதிகள் இடம் கொடுக்காது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர் பன்னீர்செல்வம் தரப்பினர்.

 இந்த போட்டா போட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.   உள்ளாட்சிகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  தமிழகத்தில்  காலியாக இருக்கும் 510 உள்ளாட்சி பதவிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது .  இதற்கான மனுத்தாக்கல் நாளை துவங்குகிறது வரும் 27ம் தேதி கடைசி நாள் .

தேர்தல் நடத்த இருக்கும் 510 பதவிகளில் 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும்,  22 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் கட்சி அடிப்படையில் தேர்தல் நடக்கிறது .  அதிமுக வேட்பாளர்கள் களம் இறங்கினால் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் கையெழுத்திட வேண்டும்.   தற்போது இருக்கும் சூழலில் இருவரும் ஒற்றுமையுடன் கையெழுத்து போடுவார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

 உள்ளாட்சி பதவிகளுக்கு உடனடியாக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்க வேண்டிய நிலை இருக்கிறது.  ஆனால் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் அதிகாரப் போட்டியில் அதற்கான தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கின்றனர்.  அதனால் இந்தத் தேர்தலில் அதிமுக போட்டியிடுமா?  அதிமுக சார்பில் களம் இறங்கினால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்று கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.   வேட்பாளர்களுக்கு கட்சி சின்னம் இரட்டை இலையில் போட்டியிட கட்சியின் அங்கீகாரம் கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி -பன்னீர்செல்வம் கையெழுத்திட வேண்டும்.  இது நடக்குமா என்பதை கட்சியினர் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.