×

’’இந்த விவகாரத்திற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைப்பாரா  மு.க.ஸ்டாலின்?’’

 

அரசு அலுவலகங்களில், ரேசன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைப்பதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் பாஜகவினர் வைத்திருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தினை அகற்றியுள்ளனர்.  தூக்கி சாக்கடையில் வீசியுள்ளனர்.

 திருச்சி பொன்நகர் காமராஜபுரம் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படத்தை பாஜக கண்டோன்மெண்ட் மண்டல் தலைவர் நேற்று முன்தினம் மாட்டினார்.  அவர் மாற்றி சென்ற சிறிது நேரத்திலேயே  சிலர் அந்த படத்தை உடைத்து சாக்கடையில் வீசி சென்றனர். இது குறித்த தகவல் அறிந்ததும் பாஜகவினர் அங்கு திரண்டு வந்தனர்.  திமுகவினரும் அங்கு திரண்டு வந்தனர்.   இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இதையடுத்து கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசாரிடம் இருவருமே  புகார் அளித்தனர்.

 திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.  அதற்கு போலீசார் அனுமதி மறுக்கவே இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

 இதன் பின்னர் பாஜக கொடுத்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் ராமதாஸ், ஆட்டோ கருணாநிதி உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  ரேஷன் கடையில் மோடியின் படத்தை மாற்றிய மண்டல் தலைவர் பரமசிவம் , சத்யகலா,  விஜயகுமார் உள்ளிட்ட  பாஜகவினர் 5 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, தொடர்ந்து சில நாட்களாக உள்ளாட்சி அலுவலகங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை  வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகற்றியும் வருகின்றனர் தி மு க வினர்.   பல இடங்களில் பாஜகவினர் மீது வன்முறை பிரயோகம் செய்யப்படுவதோடு, தமிழக காவல் துறையினர் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

அரசு அலுவலகங்களில் இந்திய பிரதமரின் புகைப்படத்தை  அகற்றுவது  ஜனநாயக விரோதம் மட்டுமல்ல, கடும் குற்றமும் கூட.  இன்று காலை கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படத்தை திமுக குண்டர்கள் சிலர் அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை கண்டிக்கும் விதத்தில் பிரதமரின் படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்திய பாஜகவினரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயக விரோத செயல். 

உடனடியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  இந்த விவகாரத்தில் தலையிட்டு கைது செய்யப்பட்டுள்ள பாஜகவினரை விடுவிக்க உத்தரவிடுவதோடு, பிரதமரின் படம் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் மீண்டும் இடம் பெற செய்ய உத்தரவிட வேண்டும்.

தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பிரதமரின் படங்களை அகற்றும் திமுகவினரின் அராஜக வெறி செயலை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்காமல் இருப்பது, திமுக தலைவர் என்ற அடிப்படையில் பிரதமரின் படங்கள் இடம் பெறக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகத்தை வலுவடைய செய்கிறது. இந்த விவகாரத்திற்கு விரைவில் முற்று புள்ளி வைப்பாரா  மு.க.ஸ்டாலின் அவர்கள்?