என்னை நம்பிய மோடி, அமித் ஷாவுக்கு நன்றி.. தொடர்ந்து 2வது முறையாக உ.பி. முதல்வராக இன்று பதவியேற்கும் யோகி
உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று முதல்வராக பதவியேற்கிறார்.
உத்தர பிரதேசத்தில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மாநில சட்டப்பேரவையின் பா.ஜ.க. தலைவராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில் கூறியதாவது: 2017ம் ஆண்டில் வெறும் எம்.பி.யாக இருந்தபோதும், ஆட்சியின் எந்த செயல்பாட்டிலும் பங்கேற்காமல் இருந்தபோதும், என்னை நம்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
2017ம் ஆண்டுக்கு முன்பு உத்தர பிரதேசத்தில் நல்லாட்சி பற்றி யாரும் பேசவில்லை. அந்த நேரத்தில் யாரும் நினைக்கவில்லை. ஆனால் இன்று இவை அனைத்தும் சாத்தியமாகி விட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார். யோகி ஆதித்யநாத் இன்று முதல்வராக பதவியேற்கிறார். லக்னோவில் உள்ள கோமதி நகரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் அரங்கத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சிரத்து சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு துணை முதல்வர் நீட்டிக்கப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் ஓ.பி.சி. வாக்காளர்கள் மத்தியில் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே 2024 நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து பா.ஜ.க. மேலிடம், கேசவ் பிரசாத் மவுரியா தேர்தலில் தோற்றுள்ள போதிலும், துணை முதல்வர் பதவியை அவருக்கு மீண்டும் வழங்கியுள்ளது.