"அய்யா மந்திரிமாரே; கரைசேருங்க அய்யாமாரே" - புயலை கிளப்பிய கஸ்தூரியின் ட்வீட்!
2021ஆம் ஆண்டின் இறுதி யாருக்கு எப்படி இருந்ததோ தெரியாது. ஆனால் சென்னைவாசிகளை உலுக்கி எடுத்துவிட்டு தான் சென்றது. சென்னை வானிலை ஆய்வு மையமே கணிக்க தவறிய பேய் மழை பிச்சு உதறியது. ஒரு மணி நேரத்திலே மிக முக்கிய சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றால் மக்களோ நீந்திச் செல்லும் அளவுக்கு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துகொண்டது. சென்னை மாநகரமே வாகனங்களின் தீவுகளாக மாறியது. அனைத்துச் சாலைகளிலும் டிராபிக்.
மாலை 6 மணிக்கு ஆபிஸ் விட்டு கிளம்பியவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு தான் வீடு சென்றார்களாம். அப்போ 10 மணிக்கு ஆபிஸிலிருந்து கிளம்பியவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இச்சூழலில் இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி, "சிங்கார சென்னை, சிங்கார சென்னைன்னு சொன்னீங்க, sinkஆகுற சென்னையா ஆயிருச்சே. ஒரே நாள் மழையில ஊரே மூழ்கிருச்சே. அய்யா மந்திரிமாரே, அதிகாரிங்களே , கொஞ்சம் மனசாட்சியோட நியாயமா வேலை செஞ்சு ஊரையும் உங்களுக்கு வோட்டு போட்டவங்களையும் கரை சேருங்க அய்யாமாரே!” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிங்கார சென்னை முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டங்களில் ஒன்றாகும். அதைக் குறிப்பிட்டே கஸ்தூரி இவ்வாறு ட்வீட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் சென்னை வானிலை ஆய்வு மையம் என்கிறார்கள். ஆம் முறைப்படி எந்தவொரு முன்னறிவிப்பையும் தமிழ்நாடு அரசுக்குக் கொடுக்கவில்லை. பொத்தாம் பொதுவாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று மட்டுமே கூறியிருந்தது. இந்தளவிற்கு அடித்து ஊற்றும் என சொல்லவே இல்லை. சொல்லப்போனால் அப்படி ஒரு மழையை வானிலை ஆய்வு மையமே எதிர்பார்க்கவில்லை.
இதுகுறித்து விளக்கமளித்த அந்த மையமோ, "கணிக்க தவறிவிட்டோம்; எங்களிடம் மேம்பட்ட தொழில்நுட்ப வசதி இல்லை. இதனால் தான் அரசுக்கு சரியாக முன்னெச்சரிக்கையை கொடுக்க முடியவில்லை” என மறைமுமாக மத்திய அரசைக் கைகாட்டிவிட்டது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். அதில், "பெருமழை புயல் போன்ற “ரெட் அலர்ட்” சூழ்நிலைகளை துரிதமாக முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மேம்படுத்தப்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.