×

அதிமுக இனி எவருடைய பாவத்தையும் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை- சி.வி.சண்முகம்

 

அதிமுகவிற்கு எந்த பாரமும் இல்லை, இனி எவருடைய பாவத்தையும் சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகேயுள்ள பிடாகத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி  மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், “அதிமுக 2 கோடி தொண்டர்களை வைத்துள்ள மிகப்பெரிய கட்சியாக உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்று எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. குண்டர்கள் உள்ள கட்சி திமுக தான். அதில் உள்ளவர்கள் வசூல் செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தியா கூட்டணியில் எது எது சிதறபோகும் என்று தெரியவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தல் வரப்போவாதால் அதிமுகவினர் தயாராக இருக்க வேண்டும். அதிமுகவிற்கு எந்த பாரமும் இல்லை. இனி எவருடைய பாவத்தையும் சுமக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. அதிமுக தெளிவாக உள்ளது. இக்கட்சியில் எந்த பதவி வேண்டுமானாலும் தொண்டர்கள்  கேட்கலாம். தொண்டர்கள் அதிமுகவில் இருந்து விலகுவதில்லை. இக்கட்சியில் அமைச்சராக இருந்தவர்கள், முதலமைச்சராக இருந்தவர்கள், எம்எல்ஏவாக இருந்தவர்கள் தான் விலகி சென்றனர். தேர்தல் வரக்கூடிய சூழலில் தான் மகளிருக்கான  இடஒதுக்கீடு அறிவிக்கபட்டுள்ளது. இளைஞர் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசியல் கட்சியினரும் அரசியல் செய்ய முடியாது” என்றார்.