அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவை; இந்த இயக்கம் மீண்டு எழும் - ராஜன் செல்லப்பா
மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராஜன் செல்லப்பா, “அண்மையில் சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் 4 அரை மணிநேரம் ஆரோக்கியமாக ஜனநாயக ரீதியில் நடைபெற்றது. வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்களின் ஆலோசனை கருத்துகளை எடுத்துசொல்லுவோம். தமிழகம் மட்டுமல்ல இந்திய துணைகண்டமே இன்று அதிமுகவை பார்த்துகொண்டுள்ளது. எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்க்கும் வகையில் வரக்கூடிய பொதுக்குழு அமையும். அதிமுகவை வீழ்த்திவிட்டோம் என மனப்பால் குடிக்காதீர். இந்த இயக்கம் மீண்டு எழும்.. அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவை” எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டமே மாற்றியமைக்கும் போது அதிமுகவில் சட்ட அமைப்பு மாற்றி அமைக்க முடியாதா.? அதிமுகவின் இதயமாக இருக்கும் பொதுக்குழுவில் சட்ட அமைப்புகள் மாற்றப்பட உள்ளது, அதிமுகவினர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களை சட்டைப்பையில் வைத்திருக்கின்றனர் வரக்கூடிய பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படும் அதிமுகவின் வழிகாட்டி படத்தையும் சட்டைப்பையில் வைக்க உள்ளோம்” என தெரிவித்தார்.