×

காங்கிரஸ், திமுகவினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் -  அதிமுக வலியுறுத்தல்.. 

 

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும்  காங்கிரஸ்-திமுகவினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழாவை புதுச்சேரியில் சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், காவிரியின் கடைமடைப்பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் கடலில் கலக்கும் உபரி நீரை தேக்கி வைக்கவும்,  சுமார் 70 ஏக்கர் நிலத்தில் ஒரு செயற்கை ஏரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது.

கடந்த காங்கிரஸ்-திமுக ஆட்சியில் ஜிப்மர் நிர்வாகத்திற்காகவும், ரயில்வே துறைக்காகவும் மண் எடுப்பதற்காக அந்த ஏரியை ஆழப்படுத்தி ஒரு லோடுக்கு ரூ.150 அளவில் பெர்மிட் போடப்பட்டது. எங்களது கூட்டணி ஆட்சி வந்த பிறகு 3 யூனிட் மண் எடுப்பதற்கு ரூ.1000 உயர்த்தப்பட்டது. ஏரியை ஆழப்படுத்த அந்த மண்ணை எடுத்து ரயில்வே பணிக்கு பயன்படுத்தும் திட்டத்தை முதல்வர் கொண்டு வந்தார். அந்த திட்டத்தில் தற்போது பல கோடி ரூபாய் ஊழல் நடந்து வருகிறது. அந்த இடத்தில் 30-ல் இருந்து 40 அடி வரை பெரிய ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண்ணை தோண்டி வருகின்றனர். இதனால் ஆற்று மணல் கிடைக்கிறது. தற்போது ஆற்று மணலின் விலை 3 யூனிட் ரூ.17 ஆயிரமாக உள்ளது. அதை பெர்மிட் என்ற முறையில் வெறும் ரூ.1,000-க்கு கொடுக்கினற்னர். இதில் மிகப்பெரிய கொள்ளை நடைபெற்று வருகிறது.

காரைக்கால் நல்லம்பள்ளி ஏரியில் காரைக்கால் சுயேட்சை எம்எல்ஏ மற்றும் பலர் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பிரமுகர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கக்கூடிய ஒரு அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மண் வாரப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும்.

மண் எடுப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இந்த 20 மாத கால ஆட்சியில் முதல்வர் ரங்கசாமியால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் 70 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி என்னுடன் ஒரே மேடையில் இதுகுறித்து விவாதிக்க தயாரா?

மேலும் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் பணி தளர்வில் இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என கூறி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத கலவரத்தை தூண்டுகிறார். உண்மையில் அரசு துறையில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் 2 மணி நேரம் பணி தளர்வை அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் விதத்தில் பேசும் காங்கிரஸ்-திமுக கட்சியினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.