அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாது - அண்ணாமலையை விளாசும் அதிமுக
திமுகவினரின் சொத்து பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை . இதன் பின்னர் அடுத்தடுத்து திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடப் போவதாக தெரிவித்து இருக்கும் அண்ணாமலை, அதிமுகவினரின் சொத்து பட்டியலையும் வெளியிடப் போவதாக சொல்லி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதற்கு திமுகவினர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு முன் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர்.
அதே நேரம் அதிமுகவினரும் அண்ணாமலைக்கு கடும் பதிலடியை கொடுத்து வருகின்றனர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே. பி. முனுசாமி, திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு வெளியிட்டது பாஜக தலைவர் என்கிற முறையிலா? இல்லை, அண்ணாமலை என்ற தனிப்பட்ட முறையிலா என்பதை விளக்க வேண்டும். பாஜக சார்பில் வெளியிடப்பட்டால் பாஜக ஆளாத மாநிலங்களிலும் ஊழல் பட்டியல் வெளியிட்டு இருக்க வேண்டும் என்று கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதேபோன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும். அப்புறம் நாங்கள் யார் என்று அவருக்கு தெரியும் என்று எச்சரித்து இருக்கிறார்.
அதே மாதிரி அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் , அண்ணாமலையை கடுமையாக விளாசி இருக்கிறார்.
’’நேற்றைய திமுக பைல்ஸ் ஏ ஒரு நகைச்சுவை காட்சி. இதில் அதிமுகவை சார்ந்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவாராம். அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாதுனு சொல்லுவாங்க. பதட்டப்படாம அரசியல் பண்ணுங்க அண்ணாமலை’’என்கிறார்.