×

மத்திய அரசு இன்னும் 2 ஆண்டுக்கு பணம் கொடுத்து உதவி செய்யணும்.. அஜித் பவார் வேண்டுகோள்

 

கொரோனா தொற்றுநோய் பாதிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இன்னும் 2 ஆண்டுக்கு பணம் (ஜி.எஸ்.டி. இழப்பீடு) கொடுத்து உதவி செய்யணும் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் வேண்டுகோள் விடுத்தார்.

மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிப்ரவரி 1ம் தேதி தாக்கல்  செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் மீது நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். ஜி.எஸ்.டி. ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஒவ்வொரு மாநிலமும் ஒரு குறிப்பிட்ட தொகையை (ஜி.எஸ்.டி. இழப்பீடாக) மத்திய அரசிடமிருந்து பெற்று வருகிறது, ஆனால் அது இப்போது நிறுத்தப்பட உள்ளது.

தொற்றுநோயை கருத்தில் கொண்டு இந்த உதவியை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு நாங்கள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதேசமயம் மத்திய அரசு இந்த உதவியை நிறுத்தினால், மகாராஷ்டிராவில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. பற்றிய விவரங்களை சரிபார்க்க வேண்டும். வருவாய் வசூல் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகிறேன்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் நேரடி வகுப்புகளை (மாநில அரசு முடிவு செய்தபடி) தொடங்கலாம். புனே மற்றும் பள்ளிகள் தொடர்பான மற்ற கட்டுப்பாடுகள் குறித்து அடுத்த வாரம் நடைபெறும் மறுஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.