×

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்!.. ஹரிஷ் ராவத்தை கிண்டலடித்த அமரீந்தர் சிங்

 

நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள் என்று ஹரிஷ் ராவத்தை கேப்டன் அமரீந்தர் சிங் கிண்டல் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் கடந்த புதன்கிழமையன்று டிவிட்டரில், காங்கிரஸ் கட்சி தலைமை மீதான தனது அதிருப்தியை  கொட்டியிருந்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், ஹரிஷ் ராவத்தின் தொடர்ச்சியான டிவிட்டுக்கு பஞ்சாப் முன்ளாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் எதிர்வினையாற்றியுள்ளார்.

கேப்டன் அமரீந்தர் சிங் டிவிட்டரில், நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்! உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு (ஏதேனும் இருந்தால்) வாழ்த்துக்கள் ஹரிஷ் ராவத் ஜி என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு ஹரிஷ் ராவத் பதிலடி கொடுத்துள்ளார். ஹரிஷ் ராவத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: அவருடைய (முன்னாள் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங்) வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். 

காங்கிரஸிலிருந்து விலகியது தவறு என்று அவர் எங்கோ உணர்கிறார் என்று நினைக்கிறேன். மேலும் மணிஷ் திவாரி தனது எஜமானரின் (அமரீந்தர்) குரலை பின்பற்றுகிறார். அமரீந்தர் சிங் தனது எஜமானரின் குரலை பின்பற்றுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார். சித்து மற்றும் அவரது விசுவாசமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் கலகத்தை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 19ம் தேதியன்று அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது ஹரிஷ் ராவத்தான் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.