×

அதிகாரம் எனது பிறப்புரிமை அதை எப்படியும் பெறுவேன் என்று சிவ சேனா கூறுகிறது... அமித் ஷா தாக்கு

 

அதிகாரம் எனது பிறப்புரிமை அதை எப்படியும் பெறுவேன் என்று சிவ சேனா கூறுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது:  பிரதமர் மோடி மற்றும் என் முன்னிலையில்,  தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் தேர்தல் போட்டியிடுவதாகவும், அவர் (தேவேந்திர பட்னாவிஸ்) மீண்டும் முதல்வராக வருவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் நீங்கள் (உத்தவ் தாக்கரே) முதல்வராக விரும்பினீர்கள்.

எனவே நீங்கள் எங்களுக்கு (பா.ஜ.க.) துரோகம் செய்து மகாராஷ்டிராவின் முதல்வராக ஆனீர்கள். 2019ல் தேர்தலுக்கு முன் மகாராஷ்டிராவுக்கு வந்தேன். நான் அப்போது சிவசேனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியிருந்தேன். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் தேர்தல் நடைபெறும் என்றும், பா.ஜ.க.வை  சேர்ந்தவர்தான் முதல்வர் என்றும் சிவ சேனாவின் தலைமையிடம் கூறப்பட்டது என்பதை இன்று மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஆனால் அவர்கள் (சிவ சேனா) அதிகாரத்துக்காக இந்துத்துவாவைத் துறந்து சமரசம் செய்து கொண்டனர். 2 தலைமுறைகள் (சிவ சேனா) ஒரு கட்சிக்கு (காங்கிரஸ்) எதிராக போராடி இப்போது அதே கட்சியுடன் ஆட்சியை பகிர்ந்து கொள்கிறார்கள். அதிகாரத்துக்காகவே பா.ஜ.க.வுக்கு சிவ சேனா துரோகம் செய்தது. நான் பொய் சொல்வதாக சிவ சேனா சொல்கிறது. சரி ஒரு கணம், நான் ஒப்புக்கொள்கிறேன்(நான் பொய் சொல்கிறேன்) ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது வைக்கப்படும் பேனர்களை நினைத்து பாருங்க.

உங்கள் புகைப்படம் மற்றும் மோடி ஜியின் புகைப்படத்தின் அளவை சரிபார்க்கவும். உங்கள் புகைப்படத்தின் அளவு மோடி ஜியின் புகைப்படத்தில் நான்கில் ஒரு பங்காக இருந்தது. ஒவ்வொரு பேச்சிலும், நீங்கள் மோடி ஜியின் பெயரை கூறியிருந்தீர்கள். மத்திய அரசின் நேரடி பலன் பரிமாற்ற திட்டத்தின் DBT என்ற சுருக்கத்தில்  மகா விகாஸ் அரசாங்கத்தில் காங்கிரஸ்   டீலர் என்பதற்காக D என்ற எழுத்தை கொள்கிறது, சிவ சேனா ஒரு தரகர் என்பதற்காக B என்ற எழுத்தை எடுத்து கொள்கிறது மற்றும் இடமாற்றங்களுக்காக தேசியவாத காங்கிரஸ் D எடுத்துக் கொள்கிறது.  சுயராஜ்ஜியம் எங்களது பிறப்புரிமை, அதை  நான் பெறுவேன் என்று கூறிய பாலகங்காதர திலக்கின் நிலம் புனே, ஆனால் சிவ சேனா அதிகாரம் எனது பிறப்புரிமை அதை எப்படியும் பெறுவேன் என்று கூறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.