சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆட்சி அமைந்தால் மீண்டும் மாபியா ராஜ்யம், சாதி வெறி வரும்.. அமித் ஷா தாக்கு
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆட்சி அமைந்தால் மீண்டும் மாபியா ராஜ்யம் வரும், சாதி வெறி வரும் என்று அமித் ஷா குற்றம் சாட்டினார்.
உத்தர பிரதேசம் முசாபர்நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆட்சியில் உத்தர பிரதேசம் மாபியாவால் கைப்பற்றப்பட்டது. மதம், ஜாதி அடிப்படையில் அரசியல் செய்தவர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தினர். 2017ல் இங்கு யோகி ஆதித்யநாத் ஜியின் அரசாங்கம் அமைந்த பிறகு அனைத்து குண்டர்களும் எல்லையை விட்டு வெளியேறினர்.
உங்கள் ஒரு வாக்கு உத்தர பிரதேசத்தில் மாபியா ராஜ்ஜியத்தையும் கொண்டு வரக்கூடும், அதேவேளையில் மாபியா ராஜ்ஜியத்திலிருந்து விடுதலை கொண்டு வரக்கூடும். சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் ஆட்சி அமைந்தால் மீண்டும் மாபியா ராஜ்யம் வரும், சாதி வெறி வரும். ஆனால் நீங்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால், உத்தர பிரதேசம் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாக மாறும்.
ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி மற்றும் சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவும் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் வரை மட்டுமே ஒன்றாக (கூட்டணி) இருப்பார்கள். அவர்களின் அரசாங்கம் அமைந்தால், ஜெயந்த் சவுத்ரி வெளியேறுவார், அசாம் கான் வெளியேறுவார். உத்தர பிரதேச மக்கள் டிக்கெட் (போட்டியிடும் வாய்ப்பு) விநியோகத்தில் இருந்து என்ன நடக்கப் போகிறது என்பதை புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.