"பட விமர்சனங்கள் வேண்டாம்; யாரும் எதுவும் பேச கூடாது" - அண்ணாமலை உத்தரவு!
"பட விமர்சனங்கள் வேண்டாம்; யாரும் பேச கூடாது" - அண்ணாமலை உத்தரவு!அண்மையில் ஜெய்பீம் படம் அமேசான் பிரைமில் வெளியானது. சூர்யா நடித்த இந்தப் படம் எந்தளவிற்கு வரவேற்பைப் பெற்றதோ, அதைவிட அதிக எதிர்ப்பையும் பெற்றது. வன்னியர் சங்கத்தினரும் பாமக தலைவர்களும் அறிக்கை மேல் அறிக்கை விட்டார்கள். அன்புமணியோ மறைமுகமாக மிரட்டினார். சூர்யாவை அடித்தால் 1 லட்சம் பரிசு என பாமக நிர்வாகி ஒருவர் நேரடியாகவே மிரட்டல் விடுத்தார். பாஜகவை பொறுத்தவரை ஹெச்.ராஜா, லட்சுமி காலண்டருக்காக விமர்சித்தார்.
ஜெய்பீம் படம் மதமாற்றம் செய்வதாகவும் கூறினார். அவரை தவிர்த்து வேறு யாரும் விமர்சிக்கவில்லை. அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை படத்திற்கு வரவேற்பு தெரிவித்தார். இச்சூழலில் நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு வெளியாகியிருக்கிறது. படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவது குறித்தும், அவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக 1998 கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டியே படம் நகர்கிறது.
இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் சர்ச்சைகள் எழாமல் இருந்தால்தான் ஆச்சரியம். இது இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே மோதலை உருவாக்குவதாக ஒருசில இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இச்சூழலில் பாஜகவினருக்கு வேண்டுகோள் விடுத்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், " திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது.
நமது கட்சி சகோதர சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். கட்சியில் முக்கியப்பதவியில் இருப்பவர்கள் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.