×

அறிவாலயம்  அரசனுடைய போக்கை கண்டித்து.. ஆளுநர் சந்திப்பு குறித்து அண்ணாமலை விளக்கம்
 

 

சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பரபரப்பாக இயங்கி வந்த கிஷோர் கே. ஸ்வாமி,  கல்யாணராமன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதுபோல் மாரிதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் அதை முறியடிக்க ஆளுநரை சந்தித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

மாரிதாஸ் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டு வருகிறார்.  அவர் மீது இருக்கும் வழக்குகளை எல்லாம் ஒன்று சேர்த்து அவரை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று பாஜகவிற்கு தகவல் தெரிய வந்திருக்கிறது.    ஏற்கனவே கிஷோர் கே. ஸ்வாமி,  கல்யாணராமன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது  போல் மாரிதாசையும் அடைத்து விடக்கூடாது என்பதால் அண்ணாமலை தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்.  

இதற்காக அவர் அறிவுறுத்தலின் பேரில்  கமலாலயத்தில் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் பாஜகவினர்.   தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

 இந்த நிலையில்  ஆளுநர் ஆர்.என்.ரவியை  சந்தித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  பாஜகவின் சமூக வலைத்தள தொண்டர்களை தொடர்ந்து கைது செய்து அச்சுறுத்தி வருகிறது திமுக அரசு.  இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அண்ணாமலை,   ‘’தமிழக ஆளுநர் மதிப்புக்குரிய ஆர்.என். ரவியை தமிழக பாஜக  தலைவர்களுடன் சென்று சந்தித்தேன்.  நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டு இருக்கும்  அறிவாலயம்  அரசனுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்பித்தோம்!’’ என்று தெரிவித்திருக்கிறார்.