நிர்மலா சீதாராமன் உடன் அண்ணாமலை, வேலுமணி சந்திப்பு- கூட்டணி குறித்து அலசல்
சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதே நேரத்தில் அவரை பா.ஜ.க.மூத்த தலைவரான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து பேசினர். ஆனால் அண்ணாமலை கர்நாடகாவில் இருந்ததால் சந்திக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை பெங்களூரில் இருந்து சென்னை விமான நிலையம் திரும்பிய தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் கோவையை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோருடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் சூழல் மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் விரிவாக ஆலோசித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகம் சார்ந்த மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை நிர்மலா சீதாராமிடம் பேசி உள்ளார். வழக்கமாக டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்களை எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தான் சந்தித்து கூட்டணி குறித்து பேசுவார்கள், இதனால் இன்றைய சந்திப்பின்போது அவர் இருந்தது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அதே நேரத்தில் நேற்று முன்தினம் டெல்லியில் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவை எல்.முருகன் நேரில் சந்தித்து ஆலோசித்த நிலையில் அடுத்தடுத்த பா.ஜ.க.வின் நகர்வுகள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.