×

மதமாற்ற எதிர்ப்பு மசோதா.. கர்நாடக சட்டப்பேரவையில் பொய் சொல்லி மாட்டிக் கொண்ட சித்தராமையா
 

 

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று மதமாற்ற எதிர்ப்பு மசோதா நிறைவேறியது. முன்னதாக அவையில் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பொய் சொல்லி  மாட்டிக் கொண்டார்.

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று  கர்நாடக மத சுதந்திர உரிமை சட்டம் 2021 என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல்  செய்யப்பட்ட உடனே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று முன்தினம் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் சட்டப்பேரவையில் நேற்று எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக மத சுதந்திர உரிமை சட்டம் 2021  மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கர்நாடாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கர்நாடக மத சுதந்திர உரிமை சட்டம் 2021  மசோதா நிறைவேறியது. முன்னதாக சட்டப்பேரவையில் விவாதத்தின்போது  கர்நாடக சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி பேசுகையில்,  சித்தராமையா ஆட்சியில் 2013ம் ஆண்டு சட்ட அமைச்சகம் மதமாற்ற எதிர்ப்பு  மசோதாவின் வரைவை தயாரித்தது. ஆனால் சட்டப்பேரவைக்கு வரவில்லை. அதே மசோதா சிறிய மாற்றங்களுடன் எங்களால் முன்மொழியப்படுகிறது என்று தெரிவித்தார். ஆனால் அதனை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சித்தராமையா மறுத்தார்.

இதனையடுத்து கர்நாடக சபாநாயகர், அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா, அந்த வரைவை மாநில அமைச்சரவையில் சமர்பிக்குமாறு கூறியதை நிரூபிக்கும் ஆவணத்தை வாசித்தார். இதனையடுத்து  மதமாற்ற எதிர்ப்பு மசோதா வரைவை அனுமதிக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டதாக அவையில் சித்தராமையா ஒப்புக்கொண்டார். ஆனாலும், அப்போது அமைச்சரவை இந்த விஷயத்தை ஒருபோதும் எடுக்கவில்லை அல்லது முன்னெடுத்து கொண்டு செல்லவில்லை என்று சித்தராமையா சமாளித்தார்.

மத சுதந்திரத்திற்கான உரிமையை பாதுகாப்பதற்கும், ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு சட்ட விரோதமாக மதமாற்றம் செய்வதை தடை செய்வதற்கும் கர்நாடக மத சுதந்திர உரிமை சட்டம் 2021  மசோதா வழிவகை செய்கிறது. மேலும், இது தண்டனை விதிகளையும் முன்மொழிகிறது. இந்த மசோதாவின்படி, வேறொரு மதத்துக்கு மாற விரும்புவோம் அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் 30 நாள் அறிவிப்புடன் ஒரு அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டும்.