×

மன்னிப்பு -கலைப்பு : அதிமுக மா.செ.வில் நடந்த களேபரம் 

 

களேபரத்துடன் நடந்து முடிந்தது அதிமுக மா.செ.க்கள் கூட்டம். அதனால், டிசம்பர் முதல் தேதி  அன்று அவசர செயற்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.  வழக்கம் போலவே ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆளாளுக்கு வெடிக்க, வழக்கம்போலவே நாங்கள் இருவரும்  ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.   முன்னதாக நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  தனது ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் உடன் சென்று ஆளுநரை சந்தித்து விட்டு வந்தது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அது இன்றைக்கு நடந்த மா.செக்கள் கூட்டத்தில் வெடித்திருக்கிறது.

 இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே,  அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினராக இருந்த சோழவந்தான் மாணிக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைத்துக்கொண்டது   மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரிதாக வெடித்திருக்கிறது . 

அந்த சந்தர்ப்பத்தில்,  உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம் என்று ஓபிஎஸ் சொல்லவும் ,  அன்வர்ராஜா மைக் பிடித்திருக்கிறார்.   10.5% 
 இடஒதுக்கீட்டு விவகாரத்தினால்தான் வாக்குகள் சரிந்தன என்று சொல்ல, பெரும் சலசலப்பு எழுந்திருக்கிறது.   வெற்றி பெற்றிருந்தால் தன்னை எம்ஜிஆர் என்று இபிஎஸ் கூறியிருப்பார் என்று கடுமையாக விமர்சித்ததால் அன்வர்ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருந்தோமே அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.  

அன்வர் ராஜா விவகாரத்தில் ரொம்பவே சூடாக இருந்த   சி.வி. சண்முகம்,  வன்னியர்கள்தான் வாக்களித்ததாகவும், முக்குலத்தோர் அ.தி.மு.க.வை விட்டுக்கொடுத்ததாகவும் கொதித்திருக்கிறார். மேலும்,   அதிமுக தலைமையை விமர்சித்து கடுமையாக விமர்சித்து பேசிவிட்டு கூட்டத்திற்கு வருகிறார்(அன்வர்ராஜா) என்றால் அவருக்கு தலைமை மீது பயம் இல்லை.  இனி தலைமையை விமர்சித்து பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொதித்திருக்கிறார்.  

 அன்வர் ராஜாவை இப்படி ஆளாளுக்கு குறிவைத்ததால், அவர் எழுந்து தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  

அதன்பின்னர்தான்  ஓபிஎஸ் -ஆளுநர் சந்திப்பு வெடித்திருக்கிறது.  செங்கோட்டையன் பேசும்போது, அனைத்து முடிவுகளையும் தலைமை எடுக்கும்போது வழிகாட்டுதல் குழு எதற்கு?  அந்த குழுவுக்கு அதிகாரத்தை கொடுங்கள்.  இல்லை என்றால் கலைத்து விடுங்கள் என்று காட்டமாக சொல்லி இருக்கிறார்.

 வழிகாட்டும் குழுவை நியமிக்கும் போது ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி  இருவருக்கும் இடையே  யாருடைய ஆதரவாளர்களை வழிகாட்டும் குழுவில் அதிகம் இடம்பெறச்செய்வது என்ற போட்டியில்   இருவரது ஆதரவாளர்கள் சம அளவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.   இந்த நிலையில் ஓ.  பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க சென்றபோது அவர் மூலமாக வழிகாட்டும் குழுவில் இடம்பெற்ற ஜே.சி.டி. பிரபாகரை மட்டுமே அழைத்துச் சென்றிருந்ததால் கடுப்பான எடப்பாடி, வழிகாட்டும் குழுவையே கலைத்து ஓபிஎஸ் நடத்தும் அரசியலுக்கு முடிவு கட்டலாம் என்று நினைத்திருக்கிறார்.

அவர் நேரடியாக இதை சொல்லாமல்தான் செங்கோட்டையனை பேச வைத்திருக்கிறார் என்று சலசலப்புகள் எழுந்திருக்கின்றன.

இத்தனை களேபரத்திற்கு பின்னர் வழக்கம்போலவே,  ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பேசும்போது,  நாங்கள் இருவரும்  ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் டிசம்பர் முதல் தேதி அன்று அவசர செயற்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.