×

அர்ஜூனன் ஸ்டாலின்- கிருஷ்ணர் உதயநிதி! : சர்ச்சை பேனர்

 

 பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பேனர் , பிளக்ஸ், கட்அவுட்டுகள் வைக்கக்கூடாது.  விழா நடக்கும் இடத்தில் முறைப்படி அனுமதி பெற்று ஒன்றிரண்டு பிளக்ஸ் பேனர்கள் கட்அவுட்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்று திமுக தலைமை இரண்டாவது முறையாக உத்தரவிட்டிருந்தது.  அந்த உத்தரவையும்  காற்றில் பறக்கவிட்டுள்ளனர் திருப்பூர் திமுகவினர்.

 உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகி இருப்பதை முன்னிட்டு,    முதல்வர் ஸ்டாலினை அர்ஜுனனாகவும், உதயநிதி ஸ்டாலினை கிருஷ்ணராகவும் சித்தரித்து பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது.

 பொதுக்கூட்டம்,  நிகழ்ச்சிகளுக்கு திமுக அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் பிளக்ஸ் பேனர்,  கட் அவுட்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  இந்த உத்தரவை கட்சியினர் முழுமையாக பின்பற்றாததால் மீண்டும் கட்சியினருக்கு அறிவுறுத்தும் படி பிளக்ஸ் பேனர்,  கட்அவுட்  பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில்  வைக்க கூடாது . மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் .பாரதி எச்சரித்து இருந்தார்.

அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு கட்சி தலைமையின் உத்தரவை கண்டுகொள்ளாமல் திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் திமுகவினர் மெகா சைஸ் பிளக்ஸ் வைத்து வருகின்றனர். மக்களுக்கு இடையூறாக வைக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்களை  நிகழ்ச்சிகள் முடிந்தாலும் அகற்றுவதில்லை.  கடந்த மே மாதம் டவுன்ஹாலில் உள்ள செல்வ விநாயகர் கோயில் வழியை மறித்து உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் அவர் நடித்த புதிய திரைப்படம் தொடர்பாக பிளக்ஸ் வைத்து இடையூறு ஏற்படுத்தினர்.

 மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து மறியலில் ஈடுபட்டனர்.  கண்ணை நம்பாதே  சினிமா தொடர்பாக புஷ்பா தியேட்டர், மேம்பாலம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பிளக்ஸ் வைத்துள்ளனர்.

 கட்சியின் உத்தரவை மீறி வைக்கப்பட்டு இருக்கும் பிளக்ஸ் பேனர்களால் நடவடிக்கை பாய்ந்து விடுமோ என்ற பயத்தில் வடக்கு மாவட்ட திமுக என்பதை மட்டும் மறைத் திருக்கிறார்கள்.  ரயில்வே மேம்பாலம் அருகில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் ஒன்றில் குருசேத்திர போரில் பங்கேற்கும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேர் ஓட்டும் நிகழ்ச்சியை மையமாக வைத்து முதல்வர் ஸ்டாலினை அர்ஜுனனாகவும் உதயநிதியை கிருஷ்ணராகவும் சித்தரித்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.  இதை பார்த்த பொதுமக்கள்,  இந்து மதத்தை கேலி செய்து பிளக்ஸ் வைப்பது தான் திராவிட மாடலா என்று ஆத்திரப்பட்டு வருகின்றனர்.