×

சரமாரி அடி -உதடு கிழிந்து 5 தையல் : அண்ணாமலை காட்டிய அதிரடி

 

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பாஜகவில் இருந்து 5 பேரை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து அவர்,  சென்னை மேற்கு மாவட்டத்தில் 29.01.2023 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்ற பொழுது கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு பிரகாஷ் - மாவட்ட துணை தலைவர், மிண்ட் ரமேஷ் - மாநில செயலாளர், நெசவாளர் பிரிவு, சசிதரன் - மாவட்ட தலைவர்,பொருளாதார பிரிவு, புருஷோத்தமன் - மாநில பொதுக்குழு உறுப்பினர், சென்னை சிவா - மாநில செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்பாளர்கள்  களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதால் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்ற பொழுது கட்டுப்பாட்டை மீறி என்று  அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதால், கட்டுப்பாட்டை மீறி என்ன நடந்தது? என்பது குறித்த தகவல் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த 29ஆம் தேதி அன்று பாஜக சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  66 இடங்களில் இந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. சென்னை மேற்கு மண்டலத்தின் சார்பாக சென்னை அம்பத்தூரில் பாஜக செயற்குழு கூட்டம் நடந்தது.   இக்கூட்டத்திற்கு தமிழக பாஜக மாநில துணை தலைவர் வி. பி. துரைசாமி தலைமை தாங்கி இருக்கிறார்.   மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ் கூட்டத்தில் தீர்மானங்களை வாசித்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  அப்போது மதுரவாயல் மேற்கு மண்டல தலைவர் டிடிபி கிருஷ்ணா எழுந்து,  எனக்கு பேச வாய்ப்பு கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். 

 இதனால் செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு எழுந்திருக்கிறது.  அந்த நேரம் திடீரென்று ஒரு தரப்பினர் எழுந்து,  கிருஷ்ணாவை சரமாரியாக அடித்து உதைத்து இருக்கிறார்கள்.  இதனால் படுகாயம் அடைந்த கிருஷ்ணாவை அவரது ஆதரவாளர்கள் தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்துள்ளார்கள்.  உதடு கிழிந்ததால் கிருஷ்ணாவுக்கு 5 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன.

 இது உட்கட்சி பிரச்சனை என்பதால் இது குறித்து கிருஷ்ணா போலீசில் புகார் கொடுக்கவில்லை.   இந்த விவகாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கவனத்திற்கு சென்றதை அடுத்து,  அவர்,  கிருஷ்ணாவை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கம் செய்து இருக்கிறார் என்று தகவல்.