×

தொடரும் பின்னடைவு.. மேற்கு வங்க பா.ஜ.க.விலிருந்து வெளியேறிய பிரபல நடிகர் 
 

 

மேற்கு வங்க பா.ஜ.க.விலிருந்து பிரபல பெங்காலி நடிகர் பாபி சென்குப்தா நேற்று வெளியேறினார். அவர் திரிணாமுல் காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு  மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல பிரபலங்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். அந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலர் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

ஆனால் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதனையடுத்து பா.ஜ.க.வில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸூக்கு சென்றனர். தற்போது பா.ஜ.க.விலிருந்து பிரபல பெங்காலி நடிகர் பாபி சென்குப்தா விலகி உள்ளார். மேற்கு வங்க பா.ஜ.க.விலிருந்து முக்கிய தலைகள் வெளியேறுவது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சென்குப்தா தனது டிவிட்டர் பக்கத்தில், பா.ஜ.க.வுடனான எனது தொடர்பு இன்று (நேற்று) முதல் முடிவுக்கு வந்து விட்டது என்பதை தெரிவிக்கிறேன். வாக்குறுதி அளித்தப்படி வாக்குறுதிகளை நிறைவேற்ற பா.ஜ.க. தவறி விட்டது. மேலும் அவர்கள் வாக்குறுதி அளித்தப்படி, மேற்கு வங்க மாநிலத்துக்காக அல்லது பெங்காலி துறைக்காக நான் எந்த வளர்ச்சியையும் பார்க்கவில்லை என்று பதிவு செய்து இருந்தார்.