×

திமுகவின் வெற்றி நிரந்தரம் அல்ல.. கூட்டணிக்குள் ஈகோவிற்கு இடமில்லை- அண்ணாமலை

 

அமித்ஷா,தமிழிசை விவகாரத்தில் யூகத்துக்கு இடம் இல்லை என்றும் தமிழிசையிடம் அமித்ஷா காட்டியது பாசம் தான் அது கண்டிப்பு இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

ஒன்றிய  இணை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்றுள்ள  எல்.முருகன்  சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். தமிழக பாஜக  சார்பில் மேள தாளம் முழங்க,பட்டாசு வெடித்தும், ஜேசிபி இயந்திரம் மூலம் பூக்களை தூவியும் ஆளுயர மாலை மற்றும் ஆரத்தி எடுத்து மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் எல்.முருகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, “கேபினட் அமைச்சர் செய்ய வேண்டிய வேலையை முருகன் செய்வார். கோவை வளர்ச்சியை நசுக்கியது திமுக அரசு தான். அதன் வளர்ச்சிக்கு எதிராக இருப்பவர்கள் அவர்கள்தான். திமுக வெற்றி என்பது  நிரந்தரமான வெற்றி இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கோவையில் 6 சட்டமன்ற தொகுதியையும் கைப்பற்றும். ஈரோடு இடை தேர்தல்  போல் விக்ரவாண்டி இடைத்தேர்தல் இருக்க கூடாது. தேர்தல் ஆணையம் மிக கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும். இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும், ஆனால் வரலாறு மாறும். பாமக போட்டியிட்டாலும், பாஜக களத்தில் இறங்கி பணியாற்றும். கூட்டணிக்குள் ஈகோவிற்கு இடமில்லை.


விரைவில் மோடி தமிழகம் வர உள்ளார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசு மூலம் நாளை வெளியாகலாம். தமிழிசை செளந்தரராஜன் கட்சியின் மூத்த தலைவர்,தேர்தலில் போட்டியிட அவர் தான் விருப்பம் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தலைவராக இருந்தார். இனியும் இருப்பார். அமித்ஷா,தமிழிசை விவகாரத்தில் யூகத்துக்கு இடம் இல்லை. தமிழிசையிடம் அமித்ஷா காட்டியது பாசம் தான் அது கண்டிப்பு இல்லை” என்றார்.