‘படுத்து பதவி வாங்கி இருப்பே’.. வெந்த மனதில் ஈட்டி பாய்ச்சாதீர்- டெய்சி
தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக, இருவரிடமும் இந்த தொலைபேசி உரையாடல் குறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான கனகசபாபதி திருப்பூரில் விசாரணை நடத்தினார்.அப்போது டெய்சி சரண், மற்றும் திருச்சி சூர்யா ஆகியோர் விசாரணைக் குழு முன்பு ஆஜராகி விளக்கமளித்தனர். இதற்கிடையில் சூர்யா சிவாவும் டெய்சி சரணும் தங்களுக்குள் சுமூகமான முடிவு ஏற்பட்டு விட்டதாக சொல்லி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது டெய்சி, ”சூர்யா எனக்கு தம்பி மாதிரி. இருவரும் பரஸ்பரம் சமூகமாக பேசி பிரச்சனையை முடிவெடுத்து இருக்கிறோம். இதனை பெரிதுபடுத்த வேண்டும். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை என்னிடம் பேசினார். இனிமேல் இதுபோல் நடக்க கூடாது என என்னிடம் அண்ணாமலை உறுதி வாங்கிக்கொண்டார். முறையாக கூப்பிட்டு விசாரித்தனர். மற்ற கட்சியில் உள்ள தலைவர்களும் இதுபோன்று பேசி உள்ளனர். இது ஒன்றும் புதிது இல்ல” எனக் கூறியிருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் டெய்சி தனது டிவிட்டர் பக்கத்தில், “'படுத்து பதவி வாங்கி இருப்பே 'என்று மனசாட்சியின்றி, வக்ர புத்தியோடு பேசும் ஆண்கள், தன் வீட்டு பெண்களை அப்படி விட்டு பிழைப்பு நடத்தினால் மட்டுமே இப்படி எழுத மனசு வரும்! இறைவனுக்கு பயந்து வாழும் நல்ல மனிதனால் இப்படி குரூரமாக மற்றவனை பேச முடியாது! வெந்த மனதில் ஈட்டி பாய்ச்சாதீர்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.