×

சவுக்கு சங்கர் பாஜக ஐடி விங்க் தலைவரா ?பிரதீப் செயலாளரா?
 

 

என்னால் முடிந்த வரை  பல சங்கடங்களை கடந்து கடந்த 1.5 ஆண்டுகளாக பயணித்தேன்!  உண்மையாக நேர்மையாக உழைத்தேன், வேதனை மட்டுமே மிச்சம்!  விடைபெறுகிறேன் என்று அறிக்கை விட்டு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் சிடிஆர் நிர்மல்குமார். அந்த அறிக்கையில் அண்ணாமலையை 420 என்று குறிப்பிட்டிருந்தார்.

உடனே,  அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எங்கு சென்றாலும் உங்களது பணி சிறக்கட்டும் என்று வாழ்த்தினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால்,  அண்ணாமலை ஆதரவாளர்கள் நிர்மல்குமாரையும் எடப்பாடிபழனிச்சாமியையும் 420 என்று பதிலுக்கு வசை பாடி வருகின்றனர்.

நிர்மல்குமாரை அடுத்து பாஜகவில் இருந்து விலகினார் மாநில செயலாளர் திலிப் கண்ணன்.   அவரும் உடனே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் முக்கியமான தலையாக இருந்த நிர்மல்குமார் சென்றுவிட்டதால் அந்த இடத்திற்கு யார் என்ற கேள்விக்குறி இருந்தது.  இந்நிலையில் அந்த இடத்திற்கு  அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை நியமனம் செய்திருக்கிறார் அண்ணாமலை என்றும்,  மாநிலச் செயலாளராக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இது குறித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும் வலைதளங்களில் பரவி வருகிறது.  ஆனால் இந்த அறிக்கை பொய்யான அறிக்கை என்று பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர் .

அண்ணாமலை வெளியிட்டதாக பரவி வரும் அந்த அறிக்கையில்,  தமிழக பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் மாநில தலைமையின் அன்பு வேண்டுகோள்.  கடந்த சில தினங்களாக பாஜகவில் நிகழும் மாற்றங்கள் மனவேதனையை ஏற்படுத்துகின்றன.  நான் எங்கோ ஒரு கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன்.  பாஜக தான் என்னை இந்த நாற்காலியில் அமர வைத்தது .  எனக்கு கட்சியின் கொள்கைகளை கோட்பாடுகளோ தெரியாது.  அதை தெரிந்து கொள்ள வேண்டிய நேரமோ அவசியமோ எனக்கு இல்லை என்றே கருதுகிறேன். 

 எனது தலைமையை வெறுத்து கட்சியிலிருந்து வெளியேற விரும்பும் நபர்கள் தாராளமாக வெளியேறி கொள்ளுங்கள்.  ஏற்கனவே வெளியேறியவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க .  பதவியில் இருந்து வெளியேறிய நபர்களின் இடத்திற்கு புதிய பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கட்சி உள்ளது.  அதன் அடிப்படையில் தமிழக பாஜக ஐடி வின் தலைவராக அனைவரும் அறிந்த முகமான பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் மற்றும் ஐடி வின் மாநில செயலாளராக பிரதீப் (வாய்ஸ் ஆப் சவுக்கு )ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் என்பதை இந்த அறிக்கை வாயிலாக தலைமை தெரிவித்துக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது . ஆனால் இந்த அறிக்கை போலியானது திட்டமிட்டு சில விஷமிகள் பரப்பி வருகின்றனர் என்று பாஜகவினர் கொந்தளித்துள்ளனர்.