×

அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம்- கரு.நாகராஜன் 

 

பாஜகவில் தற்போது 4 எம்.எல்.ஏக்கள் இருப்பதற்கு அதிமுகதான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அவருக்கு பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக மாநில துணைத்தலைவர், “எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியதை கண்டிக்கிறோம். அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்கள். அண்ணாமலை பற்றிப் பேச அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் தகுதி இல்லை. சி.வி சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் முதலில் எங்களிடம் மன்னிப்பு கேட்கட்டும். அதன் பிறகு அண்ணாமலை மன்னிப்பு கேட்பது பற்றி பார்க்கலாம். அவரவர் கருத்தை, அவரவர் சொல்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அண்ணாமலையை மட்டும் சொல்லக்கூடாது. பாஜக தனிக்கட்சியோ, அண்ணாமலைக்கு தனிக்கொள்கையோ கிடையாது. 

அண்ணாமலை பொம்மை தலைவர் அல்ல, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர் தலைவர். அண்ணாமலையை பொம்மை என செல்லூர் ராஜூ கூறுவது கோமாளித்தனமாக உள்ளது. சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் பேசுவதை காமெடியாகத்தாஎன் எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டணியை அதிமுகவினர் மறுபரிசீலனை செய்யட்டும். அதற்கும் பாஜக தலைமையைதான் அணுக வேண்டும். அவர்கள்தான் முடிவு செய்வார்கள். அண்ணாமலையும், பாஜகவும் ஒன்று தான். 1991-96ல் நடந்தது எல்லாருக்குமே தெரியும். எங்கள் தலைவர் எல்லாவற்றையும் தைரியமாக பேசுபவர். ரஜினிகாந்த் கூட தான் பேசினார். இன்று அவரிடம் போய் கேட்டால், வேறு ஒன்று சொல்வார். திமுகவிற்கு வாய்ப்பு அளிக்கும் சூழலை அதிமுக உருவாக்க கூடாது.


ஒரு கூட்டணிக் கட்சித் தலைவரை எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது. ஜெயலலிதா அவர்கள் மீது நாங்கள் மட்டுமல்ல, பிரதமரும் மரியாதை வைத்துள்ளார். அவர் பெயரை வைத்து அதிமுகவினர் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் எங்கள் தலைவரை விமர்சிக்கலாமா? அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம். அப்போதுகூட சி.வி.சண்முகத்தால் வெற்றி பெற முடியவில்லை” என்றார்.