×

பாஜக கடந்த முறை பெற்ற 35% வாக்குகளை இந்த முறையும் பெற்றுள்ளது- அண்ணாமலை

 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவு  என்பது நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் என்று கருத முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். பாஜகவை பொருத்தவரையில் இந்த முறை முதல்வர் வேட்பாளர் இல்லாமல் களத்தை எதிர்கொண்டோம். மக்கள் பாஜக மீது வைத்திருந்த அன்பை குறைத்துக் கொள்ளவில்லை. கடந்த முறை 35 சதவீத வாக்குகளை பாஜக பெற்றிருந்தது. அதே அளவு வாக்குகளை தற்போது பாஜக மீண்டும் பெற்றுள்ளது. ஆனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மட்டுமே குறைந்துள்ளது. இருந்தபோதிலும் கர்நாடகாவை பொருத்தவரையில் பெங்களூரில் அதிகமாக தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு 30 சதவீதம் அளவுக்கு தமிழர்கள் உள்ளனர். பெங்களூருவில் அதிகமான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகாவில் பாஜக முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வேண்டும் என்று களத்தில் போராடியது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. இதேபோன்றுதான் மேற்கு வங்கத்திலும் பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அரசியலில் தொடர் வெற்றி யாருக்கும் கிடையாது. தொடர் தோல்வியும் யாருக்கும் கிடையாது. என்னைப் பொருத்தவரையில் இந்த கர்நாடக தோல்வியிலிருந்து அதிகமாக கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு  மாநில தலைவர் இன்னொரு மாநில தேர்தலுக்கு சென்று பணியாற்றுவது பாஜகவில் இருந்ததில்லை. ஆனால் தமிழகத்தில் கட்சி வளர்ச்சி பணி மேற்கொள்ள ஏதுவாக கர்நாடகா தேர்தலில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

எங்களை பொறுத்தவரையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும். அதேபோன்று இந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் என்பது நாடாளுமன்ற தேர்தலில் முன்னோட்டம் என்று கருத முடியாது. ஏனென்றால் இதன்பிறகு ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெறும். கர்நாடகா தேர்தல் முடிவை தொடர்ந்து திருப்பதிக்கு சென்று பெருமாளை வழிபட உள்ளேன். வெற்றி பெற்றாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி, எந்த நிலையாக இருந்தாலும் பெருமாளிடம் சென்று வழிபடுவேன். அதற்காக திருப்பதிக்கு செல்ல உள்ளேன்” என்றார்.