அதிமுக உட்கட்சி பிரச்னை: தலையிட விரும்பவில்லை- அமித்ஷா
டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அண்ணாமலையும் பங்கேற்று இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ். பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இந்த சந்திப்பில் அண்ணாமலையுடனான எடப்பாடி பழனிசாமியின் மோதலுக்கு அமித்ஷா முற்றுப்புள்ளி வைத்தார். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அதிமுக -பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார் . அதன்படியே அண்ணாமலையும் எடப்பாடி பழனிச்சாமியும் சமாதானமாகி அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, “அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் தொடர்பான பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை. இருவரும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும். சுமூக முடிவுக்க எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது என்னைச் சார்ந்ததல்ல” எனக் கூறியுள்ளார். இதிலிருந்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இல்லை என்பதும், ஓபிஎஸ் தரப்பை பாஜக ஒதுக்கவில்லை என்பதும் தெளிவாகிறது.