×

மோடி மீதுள்ள பகையால், மார்க்சிஸ்ட் தலைவர்கள் தங்கள் தாயகத்தை கூட வெறுக்கிறார்கள்... வி.முரளீதரன் 
 

 

பிரதமர் மோடி மீதுள்ள கண்மூடித்தனமான பகையால், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தங்கள் தாயகத்தை கூட வெறுக்கிறார்கள் என்று பா.ஜ.க. எம்.பி. வி.முரளீதரன் குற்றம் சாட்டினார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நடத்திய கூட்டத்தில் அந்த கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை பேசுகையில், உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கேள்வி கேட்கும் வலிமை சீனாவுக்கு கிடைத்துள்ளது. அதனால்தான் சீனாவுக்கு எதிரான ஒரு ஒழுங்மைக்கப்பட்ட பிரச்சாரம் உலகளவில் நடந்து வருகிறது. இப்போது சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி 100வது ஆண்டு விழாவை கொண்டாடும்போது, அது மிதமான வளமான நாடாக மாறியுள்ளது.

இந்தியாவில் சீனாவுக்கு எதிரான பிரச்சாரத்தின் நோக்கம், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தாக்குவதும், எங்களுக்கு (மார்க்சிஸ்ட்) எதிராக மக்களின் உணர்வுகளை தூண்டுவதும் ஆகும். இதற்கு முன்னரும் இதுபோன்ற விஷயங்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன்பிள்ளை சீனாவை புகழ்ந்து பேசியதை பா.ஜ.க. கண்டித்துள்ளது. பா.ஜ.க. எம்.பி. வி.முரளீதரன் கூறியதாவது: எஸ்.ராமச்சந்திரன் பிள்ளையின் சீன ஆதரவு கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவர் அவமதித்துள்ளார். பிரதமர் மோடி மீதுள்ள கண்மூடித்தனமான பகையால், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தங்கள் தாயகத்தை கூட வெறுக்கிறார்கள். ராமச்சந்திரனின் நிலைப்பாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா என்பதை சி.பி.ஐ.எம். தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.