உண்மையை மறைக்காமல்... திமுக எம்பிக்கு பாஜக கொடுத்த பதிலடி
திமுக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் உச்சத்தில் இருந்த நேரத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்க நிகழ்வின் போது ஆளுநர் உரை வாசித்த போது அந்த உரையிலிருந்து சில வார்த்தைகளை பேச மறுத்தார். மேலும் சில வார்த்தைகளை அந்த உரையில் தானாக சேர்த்து படித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் ஸ்டாலின், அப்போதே எழுந்து அதற்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றினார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆளுநர் ஆத்திரப்பட்டு வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் பெரிதாகி அது தற்போது அடங்கி விட்டது. அதன் பின்னர் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருந்தார்.
அன்று சட்டப்பேரவையில் ஆளுநரின் இந்த செயலை மறைமுகமாக சாடி இருக்கிறார் திமுக எம்பி செந்தில்குமார்.
அவர், ’’ஜனாதிபதிக்கு எனது நன்றிகள்! அரசின் செயல்திட்டத்தை முழுமையாக வாசித்ததற்கு! தன் விருப்பப்படி வாக்கியத்தையும் சேர்க்காததற்கு! தனக்கு பிடிக்காத எந்த வார்த்தையையும் விட்டு விடாததற்கு! தேசிய கீதத்தை மதித்து வெளிநடப்பு செய்யாமல் பாராளுமன்றத்தின் கண்ணியத்தை நிலை நிறுத்தியதற்கு!’’ என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார். அவர், ’’ஜனாதிபதிக்கு உரிய கண்ணியத்துடன் தயாரிக்கப்பட்ட உரைக்காக மத்திய பாஜக அரசுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள். உண்மையை மறைக்காமல், மிகைப்படுத்தி சொல்லாமல் உரையாற்ற வழி வகை செய்ததற்கு நன்றி’’என்று தெரிவித்திருக்கிறார்.