×

கர்நாடக முதல்வரை மாற்றும் முடிவுக்கு வந்த பா.ஜ.க. தலைமை... 4 அமைச்சர் பதவிக்கு போட்டியிடும் 40 எம்.எல்.ஏ.க்கள்

 

கர்நாடக முதல்வரை மாற்ற பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல். மேலும் அமைச்சரவையில் காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கர்நாடகாவில் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான ஹானகல் உள்பட இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்ததால்,  பசவராஜ் பொம்மை மீது பா.ஜ.க. மேலிடம் அதிருப்தியில் உள்ளது. 2023ல் நடக்க உள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பசவராஜ் பொம்மை மீது மாநில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது பா.ஜ.க. தலைமைக்கு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் முதல்வரை மாற்றி விடலாம் என்று பா.ஜ.க. மேலிடம் முடிவு எடுத்துள்ளதாக தகவல். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக புதிய முதல்வரை பா.ஜ.க. தலைமை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை இளம் முகத்தை முதல்வராக, அதுவும் அரசியல் செல்வாக்கு பெற்ற பஞ்சமசாலி லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் முதல்வர் பதவிக்கு தலித் சமூகத்தை சேர்ந்தவரையும் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், கே.எஸ். ஈஸ்வரப்பா, சி.சி. பாட்டீல் என பல மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், கர்நாடக அமைச்சரவை மறுசீரமைப்பு விரிவாக்கம் குறித்தும் ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. தற்போது மாநில அமைச்சரவையில் 4 இடங்கள் காலியாக உள்ளது, இந்த இடங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் முயற்சி செய்வதாக தகவல்.  மதசார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்கு தாவிய எம்.எல்.ஏ.க்கள் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல். மாநில பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் முதலில் முதல்வரை மாற்றிய பிறகு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.