×

பாஜகவின் 'scambucks'.. காங்கிரஸ் வெளியிட்ட 'Corruption Rate Card’ -  கியூட் சொன்ன சவுக்கு சங்கர்.. 

 


கர்நாடகவில் ஆளும் பாஜகவின் ஊழல் பட்டியல் என நூதன முறையில் காங்கிரஸ் விளம்பரப்படுத்தியுள்ளது.  இதனை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கியூட் விளம்பரம்’என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.  

மே10ம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா,  காங்கிரஸ் தரப்பில்  ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலையுடன் பரப்புரை நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கவர்ச்சிகர அறிவிப்புகள், நூதன முறையில் விமர்சனங்கள் என கட்சிகள் மாறி மாறி மோதி வருகின்றன.  

அந்தவகையில் பாஜக ஊழல் பட்டியலை  காங்கிரஸ் கட்சி நூதன முறையில் விளம்பரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் பிரபல சர்வதேச உணவகங்களில் ஒன்றான ஸ்டார்பக்ஸ்,   விலைப்பட்டியல் போன்று  'Corruption Rate Card’எனக் குறிப்பிட்டு பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. அதில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் படத்தை அச்சிட்டு, ‘Scam Bucks' 40% ஊழல் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், விலைப்பட்டியல் வடிவில் உள்ள 'Corruption Rate Card’ல்  முதலமைச்சர் பதவி ரூ. 2,500 கோடி என்றும், அமைச்சர் பதவி ரூ.500 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.  

மேலும், அரசுப் பணி மற்றும் பணி மாறுதல் பெறுவதற்கான லஞ்சத்தொகை என குறிப்பிட்டு  KSDL பணிக்கு ரூ. 5 - ரூ.15 கோடி,  பொறியாளர்களுக்கு ரூ. 1 -ரூ5 கோடி என சப் ரெஜிஸ்டார், பேராசிரியர், உதவிப் பேராசிரியர், ஜூனியர் எஞ்சினியர், கடைசியாக கான்ஸ்டபிள் பணிக்கு ரூ. 10 லட்சம் வரை லஞ்சம் பெறப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.  

அதேபோல் மற்ற அரசு பதவிகளான  பிடிஏ கமிஷ்னர் பதவிக்கு ரூ10 -ரூ.15 கோடி எனவும்,  சேர்மேன், டிசி&எஸ்பி மற்றும் துணை வேந்த பதவிகளுக்கு ரூ.5 - ரூ10 கோடி  வரையிலும், ஏசி மற்றும் தாசில்தார் பதவிகளுக்கு  ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரை லஞ்சம் கேட்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் சாலை அமைத்தல், கொரோனா மருந்து சப்ளை,  முட்டை சப்ளை உள்ளிட்ட அரசு ஒப்பந்தங்களுக்கு 40% வரை கமிஷன் பெறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 50,000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நூதன விளம்பரத்தை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். அவர் தனது பதிவில், ‘கர்நாடக காங்கிரஸின் கியூட் விளம்பரம்’ என்று குறிப்பிட்டுள்ளார்..